“எமது பிரதேசத்தில் இதுவரை காலமும் யானை இருந்ததில்லை. எமக்குத் தெரிந்து 70 வருடங்களுக்கு மேலாக இங்கு யானை வந்ததாகக் கூடக் கேள்விப்பட்டதில்லை. திடீரென யானை ஊருக்குள் புகுந்தமை எங்களுக்கு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.
யானை திட்டமிட்டு கொண்டு வந்து இறக்கி விட்டார்கள் என்றே நாம் கருத வேண்டியிருக்கின்றது”இவ்வாறு வடமராட்சி கிழக்கு மக்கள் நேற்றுத் தெரிவித்தனர்.
வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தினுள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை யானை புகுந்துள்ளது. அதனை விரட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அது வெற்றியளிக்கவில்லை.
இந்த நிலையில் யானையின் தாக்குதலுக்குள்ளாகி நேற்றுக் காலை ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பிரதேசத்தில் பெரும் பயத்தையும் – பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
“இப்படியான சம்பவம் எங்களுக்குத் தெரிஞ்சு ஒரு 70 வருசத்துக்கு மேலாக நடக்கவில்லை. அதிர்ச்சியாகவும், பயமாகவும் இருக்கின்றது. நேற்று (நேற்றுமுன்தினமே) யானை ஊருக்குள் வந்தவுடன் அதைக் கலைத்திருந்தால் – வன உயிரினங்கள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.
பறவைகள் சரணலாயம் என்ற பெயரில் ஏற்கனவே எமது காணிகளை அரசு கபளீகரம் செய்துள்ளது. இப்போது யானை இங்கு திட்டமிட்டு இறக்கி எஞ்சிய பகுதிகளையும் அவ்வாறு கபளீகரம் செய்வதற்குத்தான் முயற்சிக்கின்றார்களோ என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்படுகின்றது.
யானையைக் கலைக்க வந்தவர்கள் இரவு 7 மணியுடன் போய்விட்டார்கள். இரவு யானை வந்தால் நாம் என்ன செய்வது” என்று மக்கள் கேள்வி எழுப்பினர்.

Post a Comment