Ads (728x90)

வானவியல் அறிஞர்களுக்கு நடப்பு ஆகஸ்ட், மிக முக்கியமான மாதம். கடந்த 7-ம் தேதி இரவு சந்திர கிரகணம் தோன்றியது. அடுத்து வரும் 21-ம் தேதி முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இதற்கிடையில் இந்த மாதம் முழுவதும் விண்கற்கள் வாணவேடிக்கை நிகழ்த்தி வருகின்றன.
பெரும்பாலான விண்கற்கள் கோளப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. அவை பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது தீப்பிழம்புகளாக எரிந்து சாம்பலாகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் இறுதி முதல் ஆகஸ்ட் வரை பூமியின் வளிமண்டலத்தில் ஏராளமான விண்கற்கள் நுழைந்து வாண வேடிக்கை நிகழ்த்துவது வழக்கம்.
இந்த ஆண்டு விண்கல் வாண வேடிக்கை கடந்த ஜூலை 17-ம் தேதி தொடங்கியது. இது ஆகஸ்ட் 27 வரை நீடிக்கும் . இந்த நாட்களில் சராசரியாக ஒரு மணி நேரத்தில் 50 முதல் 100 விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைகின்றன. இதில் உச்சகட்டமாக வரும் 12-ம் தேதி இரவு சராசரியாக ஒரு மணி நேரத்தில் 150 விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் என்று விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் சமூக வலைதளங்களில் மிகைப்படுத்தப்பட்டு வைரலாக பரவி வருகிறது.
அதாவது ‘ஆகஸ்ட் 12-ம் தேதி இரவு விண்கல் மழை பெய்யும். அன்றைய தினம் இரவே இருக்காது. விண்கற்களின் ஒளிக்கீற்றுகளால் இரவு பகலாகிவிடும்’ என்று தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. சில சமூக வலைதள பதிவுகளில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் பெயரும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நாசாவின் விண்கற்கள் ஆராய்ச்சி துறைத் தலைவர் பில் கூக் கூறியிருப்பதாவது: பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் சராசரியாக 80 முதல் 100 விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைவது வழக்கம்.
இந்த ஆண்டு அதிகபட்சமாக 150 விண்கற்கள் பூமியில் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதன் ஒளிக் கீற்றுகள் பிரகாசமாக ஜொலிக்க வாய்ப்பில்லை. நிலவின் வெளிச்சத்தால் விண்கற்களின் வெளிச்சம் மறைக்கப்பட்டுவிடும். இதற்கு முன்பு கடந்த 1990, 2000-ம் ஆண்டுகளில் விண்கற்கள் நடத்திய வாண வேடிக்கை தற்போதைய அளவைவிட 10 மடங்கு வரை அதிகம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
“விண்கற்களின் ஒளிக்கீற்றை காண விரும்பும் பொதுமக்கள் நள்ளிரவு, அதிகாலை நேரத்தில் அதன் அழகை முழுமையாக ரசிக்கலாம். டெலஸ்கோப், பைனாகுலரைவிட வெறும் கண்களால் பார்த்தால் மட்டுமே ஒளிக்கீற்றை தெளிவாகப் பார்க்க முடியும். இதற்கு பொறுமை மிகவும் அவசியம். திறந்த வெளியில் சுமார் 45 நிமிடங்கள் வரை வானத்தை மிக உன்னிப்பாகக் கவனித்தால் விண்கற்கள் எரிந்து விழுவதைக் காண முடியும்” என்று சர்வதேச விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget