Ads (728x90)

2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவேத தனது கனவு என்று வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.
2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து ஸ்ரீசாந்த் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ள, பிசிசிஐ அவருக்கு ஆயுள்காலத் தடை விதித்தது. இந்நிலையில் டெல்லி அமர்வு நீதிமன்றம், தன்னை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்தும், தன் மீதான தடையை பிசிசிஐ நீக்கவில்லை என்று கூறி கேரள உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், ஸ்ரீசாந்த் மீதான ஆயுள்காலத் தடையை நீக்கி நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
தன் மீதான தடையை நீக்கி கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பற்றி நிருபர்களிடம் ஸ்ரீசாந்த் கூறியதாவது:
இந்திய அணிக்காக ஆட முதல் முறையாக வாய்ப்பு கிடைத்த நாளை விட இப்போது அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். இந்த தீர்ப்பு எனக்கு புதிய வாழ்க்கையைத் தந்துள்ளது. ஒரு சிறிய சம்பவம் காரணமாக இந்த உலகில் நான் மோசமானவனாக சித்தரிக்கப்பட்டிருந்தேன். அதில் இருந்து மீள்வேன் என்று நம்புகிறேன்.
இந்திய அணியில் இப்போது வேகப்பந்து வீச்சாளருக்கான இடத்தைப் பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. இருப்பினும் இந்திய அணியில் என்னால் இடம் பிடிக்க முடியும் என்று நம்புகிறேன். ஏனென்றால் நான் வேகப்பந்து வீச்சாளராக இந்திய அணியில் நுழைந்த காலத்திலும் இதே போல் கடும் போட்டி நிலவியது. அந்த போட்டியைக் கடந்துதான் நான் இந்திய அணியில் இடம் பிடித்தேன். மேலும் அந்த கடும் போட்டிதான் என்னை சிறந்த வேகப்பந்து வீச்சாளனாக உருவாக்கியது.
2019-ல் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடுவதே எனது கனவு. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அது ஒரு அதிசயமாகவே இருக்கும் என்று எனக்குத் தெரியும். அதே நேரத்தில் எனக்கு அதிசயங்களின் மீது நம்பிக்கை உண்டு. இந்திய அணியில் எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அதற்கு தகுதி உடையவனாக என்னை நிரூபித்துக் காட்டுவேன்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 4 ஆண்டுகள் ஆடாமல் இருந்த பிறகு, பழைய வேகத்துடன் திரும்ப வருவது கடினமான விஷயம்தான். இருப்பினும் இந்த விஷயத்தில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர் முகமது அமீரை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு செயல்படுவேன். 5 ஆண்டு தடைக்காலத்துக்குப் பிறகு பாகிஸ்தான் அணிக்கு மீண்டும் வந்துள்ள அவர், சர்வதேச போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி வருகிறார். அதேபோன்று என் கிரிக்கெட் வாழ்க்கையிலும் நடக்கும் என்று நம்புகிறேன்.
முதல் கட்டமாக ஸ்காட்டிஷ் லீக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளேன். இப்போட்டியில் நான் கிளென்ரோத்ஸ் அணிக்காக ஆடவுள்ளேன். அதன் பிறகு கேரள அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதன் மூலம், இந்திய அணியில் இடம்பிடிக்க முயற்சி செய்வேன்.


Post a Comment

Recent News

Recent Posts Widget