யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பலொன்று துரத்தி துரத்தி வாள்வெட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டதையடுத்து நேற்று யாழ். குடாவுக்கு அவசர விஜயம் ஒன்றினை முன்னெடுத்து அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இந்த பாதுகாப்பு கட்டமைப்பு தொடர்பிலான விடயங்களை அறிவித்தார்.
யாழின் பாதுகாப்பு தொடர்பில் இறுக்கமான திட்டமொன்றினை கையாள வேண்டிய கட்டாயத்தில் பொலிஸார் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஊடக சந்திப்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மேலும் தெரிவிக்கையில்
'பொலிஸார் மீதான வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்துடன், தொடர்புடைய பிரதான சந்தேகநபர் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஆவார். அவர் ஆவா குழுவுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார். அத்துடன், இந்த சம்பவத்துடன், தொடர்புடைய மேலும் ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் பொலிஸாரை விரட்டி விரட்டி தாக்கியுள்ளனர். அவர்கள் அதிக வலு கொண்ட மோட்டார் சைக்கிள்களில் வருகை தந்துள்ளனர். சந்தேக நபர்களைக் கைது செய்ய நடமாடும் பொலிஸ் பிரிவு, விஷேட தேடுதல் நடவடிக்கைகள் ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விஷேட அதிரடிப் படையினர் இது தொடர்பில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படும்.
யாழ். குடா முழுவதும் பூரணமாக எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. ஏனெனில் இதுவரை நாம் இறுக்கமான பாதுகாப்பு விதிமுறைகளை அமுல் செய்யவில்லை. அவ்வாறு இறுக்கமான விதிமுறைகளை அமுல் செய்யும் போது பொதுமக்கள் அதனை தாம் சுதந்திரமாக நடமாடுவதற்கு இடையூறாக கருதக் கூடும். அதனாலேயே அவ்வாறு இதுவரை நாம் நடந்துகொள்ளவில்லை. எனினும் தற்போது நிலைமை மோசமாக உள்ளது.
தற்போதைய நிலைமை பொது மக்களை சார்ந்ததாக இல்லை. அப்பாவி பொது மக்களும் இங்கு சேவை செய்யும் அரச உத்தியோகத்தர்களும் அச்சத்துடன் உள்ளார்கள். பொலிஸாரும் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
அதனால் நாம் களத்தில் இறங்கி நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். ஏனெனில் இவ்வாறான விரும்பத்தகாத அச்சுறுத்தல் நடவடிக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்கின்றன. இதனை அனுமதிக்க முடியாது. இனி மேல் இவ்வாறு இடம்பெறுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
தேசிய பாதுகாப்பு, பிரதேசத்தின் பாதுகாப்பு என்பவற்றை உறுதி செய்வதும் அச்சமின்றி பொது மக்கள் நடமாடக் கூடிய சூழலை ஏற்படுத்துவதும் பொலிஸாராகிய எமது பொறுப்பாகும். இங்கு தற்போது ஒரு வித்தியாசமான நிலைமை உள்ளது. எனவே அதனை வெற்றிகொள்ள பிரத்தியேகமான வித்தியாசமான மூலோபாயங்களை நாம் கையாள உள்ளோம்.
காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியம், யாழ். பொலிஸ் பிராந்தியங்களில் உள்ள 17 பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கி, பொலிஸ் உயர் அதிகாரிகளையும் அறிவுறுத்தி இந்த மூலோபாயங்கள் நடைமுறைப்படுத்தப்படும். இன்று ( நேற்று) இதற்கான ஆலோசனைகளை தனித்தனியாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கும், இவ்வாறான நிலைமையை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து ஏனைய அனைவருக்கும் ஆலோசனை வழங்கவுள்ளேன்.
நாம் ஒன்றிணைந்த ஒரு நடமாடும் நடவடிக்கை, தேடுதல் வேட்டை, உள்ளிட்டவற்றை முன்னெடுப்போம். விஷேட அதிரடிப்படையினருடன் ஏனைய ஆயுதப் படைகளையும் இதில் இணைத்து செயற்படவுள்ளோம். இவ்வாறான சமூக விரோத செயல்களில் ஈடுபடும் தவறான நடவடிக்கை உள்ள கடைசி நபரை கைது செய்யும் வரை இந்த நடவடிக்கை தொடரும்.
பொது மக்கள் அச்சமின்றியும் சுதந்திரமாகவும் வாழக் கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும். இது எமது கடமை. அதனால் நாம் பொது மக்களிடம் இவ்வாறான நடவடிக்கைகள் இங்கு நடப்பது தொடர்பில் மன்னிப்பு கேட்கின்றோம்.
நாம் அனைவரும் இலங்கையர்கள். எம்மிடம் பிரதேச, மத, இன வேறுபாடுகள் இருக்க முடியாது. பெரியவர் சிறியவர், ஆண், பெண், கற்றவர் கற்காதவர் என எமக்கு எந்த வேறுபாடும் இருக்காது. நாம் மனித நேயத்துடன் எல்லா விடயத்தையும் அனுக வேண்டும்.
ஜனாதிபதியும், பிரதமரும், சட்டம் ஒழுங்கு அமைச்சரும் மிகத் தெளிவான அறிவுறுத்தல்களை யாழ். விவகாரம் தொடர்பில் எமக்கு அளித்திருக்கின்றார்கள். எனவே நாம் அதிரடிப்படையினரையும் ஆயுதப் படையினரையும் இணைத்து மிகத் தெளிவான இறுக்கமான உறுதியான பாதுகாப்பு கட்டமைப்பொன்றை ஏற்படுத்தவுள்ளோம்.
எனவே இந்த சட்ட விரோத அச்சுறுத்தல் செயற்பாடுகளை ஒழிக்க பொது மக்கள் எமக்கு ஒத்துழைக்க வேண்டும். அவர்கள் தொடர்பில் தகவல் தர வேண்டும். தகவல் தருவோரின் இரகசியம் காக்கப்படும். நீங்கள் எனக்கே நேரடியாக தகவல் தரலாம். அல்லது வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு தகவல் தரலாம். அல்லது யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு தகவல் வழங்கலாம். மக்கள் சுதந்திரமாக வாழக் கூடிய அமைதியான சூழலை ஏற்படுத்துவதே எமது இலக்கு என்றார்.

Post a Comment