யாழ். நல்லூர் கோவிலின் பின்புறமாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூடானது நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்ததா? இல்லையா என்பதை விசாரணையின் நிறைவில் துல்லியமாக அறிய கூடியதாக இருக்கும். இதுவரையிலான விசாரணைகளின் படி அது திடீரென ஏற்பட்ட சம்பவமாகவே உள்ளது.
அது திட்டமிடப்பட்டதல்ல. எவ்வாறாயினும் நாம் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை இழந்துவிட்டோம் என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.
எனினும் அது தொடர்பில் பூரண விசாரணை ஒன்று இடம்பெறும் நிலையில் உண்மை வெளிப்படுத்தப்படும். எனவே விசாரணை உள்ள நிலையில் மேலதிகமாக அது தொடர்பில் என்னால் எதனையும் கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதேபொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்தார்.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கருத்து தெரிவிக்கும் போது அது நீதிபதியை இலக்கு வைத்தது அல்ல என கூறியுள்ளார். உண்மையில் அச்சம்பவத்தின் பின்னணி என்ன?' என ஊடகவியலாளர்கள் இதன்போது பொலிஸ் மா அதிபரிடம் கேள்வி எழுப்பினார்.
பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிடுகையில், ஆம், இதிலே பல கோணங்கள் உள்ளன. மதிப்புக்குரிய நீதிபதி ஒரு விடயத்தை கூறுகின்றார். பொதுமக்கள் இன்னொரு விடயத்தை கூறுகின்றார்கள். சில நேரடி சாட்சியாளர்கள் இன்னொரு விடயத்தை கூறியுள்ளார்கள். எனினும் இவை அனைத்தும் கணக்கில் கொள்ளப்பட்டு விசாரணை நடக்கிறது. தற்போதும் அது விசாரணை மட்டத்தில் உள்ளது. எனவே விசாரணைகளின் நிறைவில் இலக்கு தொடர்பில் தெளிவான முடிவுக்கு வரலாம்.
எனினும் இதுவரை, குறித்த சம்பவம் திட்டமிடப்பட்டதல்ல என்பதும், திடீரென ஏற்பட்டது என்பதும் தெரிய வந்திருக்கின்றது. நீதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸார் அதிக அக்கறை செலுத்தியுள்ள நிலையில் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறா வண்ணம் நடவடிக்கைகள் முன்னெ டுக்கப்படவேண்டும் என்றார்.

Post a Comment