அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவையும் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவை யும் அவர்களது அலுவலக அதிகாரிகளையும் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் நேற்று கடுமையாகச் சாடினார்.
கொந்தளிப்பான அவரது பேச்சால், அதிகாரிகள் ஆடிப்போனார்கள். குழம்பிப் போனார்கள்.மருதங்கேணி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான திருமதி விஜயகலா மகேஸ்வரன், அங்கஜன் இராமநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
கூட்டத்தின் ஆரம்பத்தில் உரையாற்றிய திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்ததாவது: ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடைபெறாமையினால் பாதிக்கப்படுவது நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அதிகாரிகளோ அல்லர். மக்கள்தான். கூட்டங்கள் ஒழுங்காக நடக்காததால் ஒதுக்கப்படுகின்ற நிதி திரும்பிச் செல்கின்றது. எங்களது நிதி தென்பகுதிக்குப் பயன்படுத்தப்படுகின்றது.
14 மாதங்களுக்குப் பின்னர் மருதங்கேணி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறுகின்றது. போகிற போக்கில் இந்தக் கூட்டத்தையும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வந்துதான் நடத்த வேண்டிய கட்டாயம் வரும்.
அரச தலைவர் மைத்திரிபாலவின் செயலகம் மாறுபாடான கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதே இதற்குக் காரணம். அரச தலைவரின் செயலகம் முரண்பாடான கருத்துக்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றது.
அதனை அரச தலைவர் அனுப்புகின்றாரா, தலைமை அமைச்சர் அனுப்புகின்றாரா, அங்கு இருக்கின்ற அதிகாரிகள் அனுப்புகின்றனரா? நான் நினைக்கின்றேன், அங்கிருக்கின்ற அதிகாரிகள் மதுபான விருந்துகளுக்குச் சென்றுவிட்டு அலைபேசி மூலமாக மாறுபாடான தகவல்களை வழங்குகின்றார்கள் என்று.
இந்தப் பகுதி மக்கள் போரால் பாதிக்கப்பட்டார்கள். கடந்த அரசால் பாதிக்கப்பட்டார்கள். தற்போது கூட்டு அரசாலும் பாதிக்கப்படுகின்றனர். (அந்த அரசில்தான் அவரும் அமைச்சராக இருக்கிறார்)
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன பொலனறுவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன பொலனறுவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பைச் சேர்ந்தவர். ஆனால் இந்தப் பகுதி அபிவிருத்தியை அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
தேசியப் பட்டியல் ஊடாகவும் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிருந்து தெரிவு செய்யப்பட்டவர்களது கருத்துக்களைக் கட்டாயம் கேட்கவேண்டும். அரச தலைவரும், தலைமை அமைச்சரும் தங்கள் மாவட்டங்களை, மாகாணங்களை அபிவிருத்தி செய்துகொண்டு எங்களைக் கூலி ஆள்கள் போன்று, அவர்களுக்கு வேலை செய்பவர்கள் போன்று பயன்படுத்த முயற்சிக்கின்றார்கள்.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட ரீதியில் சர்வாதிகாரம் செலுத்துவார் என்றால், நாங்கள் இதிலிருந்து விலகுகின்றோம். சர்வாதிகார ஆட்சி முறைக்கு நீங்கள் யாரும் துணை போகக் கூடாது.
வித்தியா விவகாரம்
சமூக வலைத்தளங்களினால் நான் பாதிக்கப்பட்டிருக்கின்றேன். நான் பிழை செய்யவில்லை. புங்குடுதீவு மாணவியின் படுகொலை நடந்த பின்னர், சந்தேகநபர் கட்டி வைக்கப்பட்ட இடத்துக்கு நான்தான் சென்றிருக்கின்றேன். அங்கு மூன்று மணித்தியாலம் காத்துக் கொண்டிருந்தும், பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒரு பொலிஸாரையும் அனுப்பவில்லை. மாணவி படுகொலைக்கு காரணமானவர்களின் பெயர்ப் பட்டியலை நான்தான் கொடுத்தேன் – என்றார்.

Post a Comment