எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்தின் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது, மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்தப் போட்டியில் பிங்க் நிறப்பந்தில் ஆடி இங்கிலாந்தின் அலிஸ்டர் குக், ஜோ ரூட் ஆகியோர் சதங்களடித்து ஒளியேற்ற இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 348 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் நாள் ஆட்ட முடிவில் அலிஸ்டர் குக் 153 ரன்களுடனும், மலான் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஜோ ரூட் (136), அலிஸ்டர் குக் (153 நாட் அவுட்) இணைந்து 3வது விக்கெட்டுக்காக சாதனை 248 ரன்களைக் குவித்தனர் இந்த மைதானத்தில் இதுவே 3வது விக்கெட்டுக்கான சிறந்த கூட்டணி ரன்களாகும். முன்னதாக அறிமுக வீரர் மார்க் ஸ்டோன்மேன் மற்றும் டாம் வெஸ்ட்லி தலா 8 ரன்களில் வெளியேறினர்.
இதில் ஸ்டோன்மேனுக்கு கிமார் ரோச் வீசிய பந்து அருமையானது, எவ்வளவு பெரிய பேட்ஸ்மெனாக இருந்தாலும் குச்சிதான். மிடில் ஸ்டம்பில் பிட்ச் ஆகி லேசாக அவுட் ஸ்விங் ஆகி ஆஃப் ஸ்டம்பைப் பதம் பார்த்தது. வெஸ்ட்லி கமின்ஸின் உள்ளே வந்த பந்தை கால்காப்பில் வாங்கி களநடுவர் மறுக்க ரிவியூவில் வெளியேறினார்.
அதன் பிறகு ஜோ ரூட் இருக்கும் பார்முக்கு மே.இ.தீவுகளின் தாக்கமற்ற பந்துவீச்சு என்ன செய்ய முடியும்? ஜோ ரூட் 13வது டெஸ்ட் சதத்தையும் குக் 31-வது டெஸ்ட் சதத்தையும் எடுத்தனர். இது மே.இ.தீவுகளுக்கு எதிராக ரூட்டின் 2-வது சதமாகும், 139 பந்துகளில் சதம் கண்டார். 189 பந்துகளில் 136 ரன்களை 22 பவுண்டரிகளுடன் எடுத்த ஜோ ரூட், கிமார் ரோச் பந்து ஒன்றை கோட்டை விட மட்டைக்கும் கால்காப்புக்கும் இடையே புகுந்து பவுல்டு ஆனார்.
குக் தனது 153 ரன்களில் இதுவரை 23 பவுண்டரிகளை அடித்துள்ளார். பிறகு தனது 10வது 150+ ஸ்கோரை எட்டினார். லென் ஹட்டன், வாலி ஹேமண்ட், கெவின் பீட்டர்சன் சாதனைகளை இதன் மூலம் சமன் செய்தார்.
டேவிட் மலான் 2 ரன்களில் இருந்தபோது கார்லோஸ் பிராத்வெய்ட் பந்தில் கேட்ச் கொடுத்தார் ஆனால் ஸ்லிப்பில் தவற விடப்பட்டது. மே.இ.தீவுகள் புதிய பந்தை எடுப்பதற்கு பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா-வின் உத்தரவு தேவைப்பட்டது, ஆனால் அந்த 8 ஓவர்களில் விக்கெட் விழவில்லை.
மொத்தத்தில் மே.இ.தீவுகளில் நல்ல ஆற்றலுடன் வீசியது கிமார் ரோச் மட்டுமே, மற்றவர்களால் பேட்ஸ்மென்களுக்குத்தான் வாழ்வு.

Post a Comment