கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாள முன்னணி நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக மலையாள முன்னணி நடிகர் திலீப், கடத்தல் கும்பல் தலைவன் பல்சர் சுனில் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கு நடந்து வருகிறது.தற்போது இந்த வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. திலீபின் இரண்டாவது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன் போலீஸ் விசாரணை வளையத்திற்குள் இருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் அவர் கைது செய்யப்படலாம் என்கிற சூழ்நிலையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் திலீபின் நெருங்கிய நண்பரும், நடிகரும், இயக்குனருமான நாதிர்ஷாவும் போலீஸ் விசாரணை வளையத்துக்குள் வந்திருக்கிறார். விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையொட்டி நேற்று கொச்சியில் உள்ள ஆலுவா போலீஸ் கிளப்பில் நாதிர்ஷா ஆஜரானார். அவரிடம் போலீசார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணை முடிந்து வெளியில் வந்த நாதிர்ஷா "இந்த வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதை விசாரணையில் தெரிவித்திருக்கிறேன். திலீபுக்கும் சம்பந்தம் இருக்காது என்று நம்புகிறேன். பல்சர் சுனில் யார் என்பதே எனக்குத் தெரியாது" என்றார். நாதிர்ஷா ஏற்கெனவே முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
Post a Comment