Ads (728x90)

டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.

டென்மார்க்கின் ஒடன்ஸ் நகரில் நடைபெற்ற இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 19-ம் நிலை வீரரான தென் கொரியாவின் லீஹைனை எதிர்த்து விளையாடினார். சுமார் 25 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21-10, 21-5 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

25 வயதான ஸ்ரீகாந்த், இந்த ஆண்டு சூப்பர் சீரிஸ் தொடரில் பட்டம் வெல்வது இது 3-வது முறையாகும். ஏற்கெனவே அவர், ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா போட்டிகளிலும் பட்டம் வென்றிருந்தார். ஸ்ரீகாந்த் கூறும்போது, “அடுத்த ஆண்டில் குறிப்பிட்ட அளவிலான தொடர்களில் மட்டுமே விளையாட விரும்புகிறேன். சுமார் 10 தொடர்களில் பங்கேற்பேன். இதனுடன் காமன்வெல்த் போட்டி, ஆசிய விளையாட்டு போட்டி, உலக சாம்பியன்ஷிப், சையது மோடி தொடர், பிபிஎல் தொடர் என மொத்தம் 15 முதல் 17 தொடர்களில் விளையாடுவேன்.

தற்போது விளையாடி வரும் விதம் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த வாரத்தில் கடினமான சவால் அளிக்கக்கூடிய வீரர்களை வீழ்த்தி உள்ளேன். எனது கனவு நனவாகி உள்ளது என்று என்னால் கூறமுடியாது. ஏனெனில் இந்த ஆண்டில் 3 பட்டங்களை வெல்வேன் என கனவிலும் நினைத்தது கிடையாது. நன்றாக விளையாடுவதை தொடர விரும்புகிறேன். இந்த ஆண்டு எனக்கு சிறப்பாக அமைந்துள்ளது. காயத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு சிறப்பாக விளையாடி வருகிறேன். இன்னும் அதிக அளவிலான சூப்பர் சீரிஸ் தொடர்கள் உள்ளன. அவற்றையும் சிறப்பாக முடிக்க விரும்புகிறேன்.

டிசம்பரில் நடைபெறும் துபை சூப்பர் சீரிஸ் பைனல் மிகவும் முக்கியமான தொடர். சீனா, ஹாங்காங் போட்டிகளுக்கு பிறகு எனது கவனம் துபை போட்டியின் மீதே இருக்கும்.

2014-ல் துபை தொடரில் அரை இறுதி வரை முன்னேறினேன். ஆனால் 2015-ம் ஆண்டில் லீக் சுற்றிலேயே தோல்வி கண்டேன். இது ஒரு விஷயமே இல்லை. ஒரு பாட்மிண்டன் வீரர் என்பவர், கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றை மறந்துவிட்டு புதிதாக தொடங்க வேண்டும்.

இதனால் 2015-ல் நிகழ்ந்ததை பற்றி நான் சிந்திக்க விரும்பவில்லை” என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget