ஐரோப்பியன் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திவிஜ் சரண், அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.பெல்ஜியத்தின் அன்ட்வெர்ப் நகரில் நடைபெற்ற இந்த தொடரில் திவிஜ் சரண் ஜோடி இறுதிப் போட்டியில் மெக்சிகோவின் சான்டிகோ கோன்சலஸ், சிலியின் ஜூலியோ பெரால்டா ஜோடியை எதிர்த்து விளையாடியது.
இதில் திவிஜ் சரண் ஜோடி 6-4, 2-6, 10-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த சீசனில் ஏடிபி தொடரில் திவிஜ் சரண், கோப்பையை வெல்வது இதுவே முதன்முறை. ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற சென்னை ஓபனில் அவர், பூரவ் ராஜாவுடன் இணைந்து விளையாடி இறுதிப் போட்டி வரை முன்னேற்றம் கண்டிருந்தார்.
வெற்றி குறித்து திவிஜ் சரண் கூறும்போது, “இந்த ஆண்டில் எனது கடைசி ஏடிபி டூரில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த இரு மாதங்கள் எனக்கு எளிதாக அமையவில்லை. பல்வேறு ஜோடிகளுடன் இணைந்து விளையாடினேன். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தினேன்.
ஸ்காட் லிப்ஸ்கியும் நானும், இந்தத் தொடரில் சில சிறந்த ஜோடிகளை வீழ்த்தி பட்டம் வென்றுள்ளோம். இது எனது தன்னம்பிக்கையை முன்னோக்கி நகர்த்த உதவும். தொடர்ந்து இணைந்து விளையாடுவது குறித்து நாங்கள் இருவரும் பேசுவோம். சில சாலஞ்சர்ஸ் தொடர்களில் விளையாட திட்டமிட்டுள்ளேன்” என்றார்.
Post a Comment