புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக தென்னிலங்கை மக்களை தவறாக வழிநடத்திச் செல்லாதீர்கள் என முன் னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் நேரடியாக வலியுறுத்தியுள்ளார்.இலங்கை பாராளுமன்றத்தின் 70ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடைபெறும் விசேட விழாவில் கலந்து கொள்வதற்காக பங்களாதேஷின் சபாநாயகர் கலாநிதி. ஷெரின் ஷர்மின் சௌத்தி வருகை தந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவர் ரியாஸ் ஹம்மியத்துல்லா தனது இல்லத்தில் இரவு விருந்துபசாரமொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த விருந்துபசாரத்தில் பங்கேற்பதற்கு அரசியல் கட்சிகளினது முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இச்சமயத்தில் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், இராஜங்க அமைச்சர்களான ஹர்ஷ டி சில்வா, ஏ.எச்.எம் பௌசி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியூர்தீன், முன்னாள் வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் ஒரே மேசையில் அமர்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தது.
இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுக்கள் எழுந்தன. அதில், எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடத்தில் புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை வௌியாகியுள்ளது. அந்த அறிக்கை தொடர்பாக ஏன் நீங்களும்(ஜி.எல்.பீரிஸ்) மற்றும் கூட்டு எதிர்க்கட்சியினரும் தெற்கிலும் ஏனைய பிரசேதங்களிலும் தவறான கருத்துக்களைக் கூறுகின்றீர்கள். தாங்களே(ஜி.எல்.பீரிஸ்) அதிகாரங்கள் பகிர்வு தொடர்பான வரைபொன்றை முன்னர் நீலன் திருச்செல்வத்துடன் இணைந்து மேற்கொண்டிருந்தீர்கள்.
அதிலுள்ள விடயங்களும் இந்த இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. நாட்டை பிரிக்கப்போவதாகவோ அல்லது பௌத்த மதத்திற்கு எதிரானதாகவோ எந்தவொரு முன்மொழிவிலும் குறிப்பிடப்பிடவில்லை. ஆகவே எந்த அடிப்படையில் தாங்கள்(ஜீ.எல்) இத்தகைய பிரசாரங்களை முன்னெடுக்கின்றீர்கள். தயவு செய்து இடைக்கால அறிக்கையை முழுமையாக ஆராய்ந்து உங்களின்(ஜி.எல்) கருத்துக்களை முன்வையுங்கள் என்று சற்றே கடுமையான தொனியில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இடைக்கால அறிக்கையில் உள்ள விடயங்கள் உட்பட புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் எதிர்கால செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு கூட்டு எதிர்க்கட்சி முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment