உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டணி அமைத்து கைச் சின்னத்தில் களமிறங்குவதா அல்லது வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதா என்பது தொடர்பில் எதிர்வரும் 5ஆம் திகதிக்குப் பின்னரே சிறிலங்கா சுதந்திரக் கட்சி இறுதி முடிவெடுக்கவுள்ளது.அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தின் போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது கடந்த தேர்தல்களின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக வெற்றிலைச் சின்னத்திலேயே தேர்தலை எதிர்கொண்டது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சுதந்திரக் கட்சியின் கைசின்னத்திலேயே போட்டியிடும் என்று அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன ஆரம்பத்தில் அறிவித்திருந்தார்.
சுதந்திரக் கட்சியின் இந்த முடிவுக்குப் பங்காளிக் கட்சிகள் சில கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தன. வெற்றிலைச் சின்னத்தில் களமிறங்கினால்தான் கூட்டணி சாத்தியமாகும் என்றும் சுட்டிக் காட்டியிருந்தன.
அத்துடன், மகிந்த அணியை இணைத்துக்கொண்டு களமிறங்குவதாக இருந்தாலும் பொதுச்சின்னமொன்று அவசியம் எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது பற்றி ஆராயச் சுதந்திரக் கட்சி கூடவுள்ளது.
Post a Comment