உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி’ஆர் விருதை 5-வது முறையாக போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றார்.ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கு தங்க கால்பந்து டிராபி விருதான பலோன் டி’ஆர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று நடைபெற்றது. இதில் சிறந்த வீரர் விருது போர்ச்சுக்கல் தேசிய அணி வீரரும் ரியல் மாட்ரிட் கிளப் அணியின் நட்சத்திரமுமான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டது. 2-வது இடத்தை மெஸ்ஸியும், 3-வது இடத்தை நெய்மரும் பெற்றனர்.
ரொனால்டோ இந்த விருதை 5-வது முறையாக பெற்றுள்ளார். இதற்கு முன்னர் 2008, 2013, 2014, மற்றும் 2016-ம் ஆண்டில் வென்றிருந்தார். இதன் மூலம் பலோன் டி’ ஆர் விருதை அதிகபட்சமாக 5 முறை வென்றிருந்த மெஸ்ஸியின் சாதனையை தற்போது ரொனால்டோ சமன் செய்துள்ளார். விருதை பெற்றுக் கொண்ட பிறகு 32 வயதான ரொனால்டோ கூறும்போது, “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது என் வாழ்க்கையில் அற்புதமான தருணம்.
தனிப்பட்ட அளவில் இந்த ஆண்டு எனக்கு சிறப்பாக அமைந்தது. சாம்பியன்ஸ் லீக், லா லி கா தொடர்களை வென்றோம். சாம்பியன்ஸ் லீக் தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரராக இருந்தேன். இதே அளவிலான உயர்மட்ட ஆட்டத்தை மேலும் சில ஆண்டுகளுக்கு தொடர முடியும் என்ற நம்பிக்கையும், மெஸ்ஸி உடனான போராட்டமும் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது. நெய்மரிடம் அதிக திறமை உள்ளது. எதிர்காலத்தில் இந்த விருதை அவர் பெறுவார் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
லா லிகா தொடரில் 25 கோல்களையும், சாம்பியன்ஸ் லீக் தொடரில் 12 கோல்களையும் ரொனால்டோ அடித்திருந்தார். அதேவேளையில் போர்ச்சுக்கல் அணிக்காக 11 கோல்களையும் அடித்திருந்தார். 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு போர்ச்சுக்கல் தகுதி பெற்றதில் ரொனால்டோவின் பங்கு முக்கியத்துவம் பெற்றிருந்தது.
Post a Comment