ஐ.நா. சபையின் மூத்த தூதர் ஜெப்ரீ பெல்ட்மேன் 4 நாட்கள் பயணமாக நேற்று வடகொரியாவுக்கு சென்றார்.வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுதம், ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதால் அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்குப் பதிலடியாக அணு ஆயுத போருக்கு தயார் என்று வடகொரியா சவால் விடுத்துள்ளது. தற்போது அமெரிக்கா, தென்கொரிய விமானப்படைகள் இணைந்து 4 நாட்கள் போர் ஒத்திகையை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்தப் பின்னணியில் ஐ.நா. சபையின் மூத்த தூதர் ஜெப்ரீ பெல்ட்மேன் 4 நாள் பயணமாக நேற்று வடகொரியாவுக்கு சென்றார். நியூயார்க்கில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு நேற்றுமுன்தினம் அவர் விமானத்தில் சென்றார். அங்கிருந்து வடகொரியாவின் ‘ஏர் கொரியா’ விமானம் மூலம் நேற்றுமாலை அவர் அந்த நாட்டின் தலைநகர் பியாங்யாங்கிற்கு சென்றார்.
வடகொரிய வெளியுறவு அமைச்சர் ரி யாங்-ஹோ உட்பட பல்வேறு முக்கிய தலைவர்களை அவர் சந்தித்துப் பேசுகிறார். போர் பதற்றத்தை தணிக்க அவர் முயற்சி மேற்கொள்வார் என்று ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 6 ஆண்டுகளாக வடகொரியாவுக்கு ஐ.நா. அதிகாரிகள் யாரும் செல்லாத நிலையில் பெல்ட்மேனின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது
Post a Comment