எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே கண்டிருந்த இணக்கப்பாடுகள் நேற்று முற்றுமுழுதாகக் குழம்பிப்போயின.கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த முதல் கூட்டத்தில் பங்கீடு தொடர்பில் 8-0 சதவீதமான இணக்கப்பாடு ஏற்பட்டதாக அனைத்துக் கட்சிகளும் அறிவித்திருந்தன. ஆனால், நேற்று நடந்த கூட்டத்தில் இணக்கம் காணப்பட்ட அந்த 80 வீதத்துக்குள்ளேயே பிரச்சினைகள் எழுந்து அனைத்தும் குழம்பிப் போயின. இறுதியில் எந்த இணக்கமும் எட்டப்படாமலேயே நேற்றைய கூட்டம் முடிவடைந்தது.
கூட்டம் முறையாக முடிவுக்கு வருவதற்கு முன்னதாகவே ரெலோ மற்றும் புளொட் அமைப்பின் பிரதிநிதிகள் கூட்டத்திலிருந்து வெளியேறினர். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தின் ஆரம்பத்தில் மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பில் பேசப்பட்டது. ரெலோவும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு பிரதிநிதிகளும் முதன்மைப் பேச்சு வட்டத்துக்கு வெளியே தனியாகப் பேச்சு நடத்தினர். முடிவில், ரெலோவுக்கு 2 சபைகளும், புளொட்டுக்கு ஒரு சபையும், எஞ்சிய ஆறு சபைகளையும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு வழங்குவது என்ற முடிவுஅறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த முடிவை புளொட் எதிர்த்தது.
ரெலோவும் தமக்கு வழங்கப்படும் 2 சபைகளில் மட்டக்களப்பு மாநகரசபை அடங்கவேண்டும் என்று வலியுறுத்தியது. அதனைத் தரமுடியாது என்று தமிழ் அரசுக் கட்சி நிராகரித்துவிட்டது. இதனால் மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பில் முடிவு எட்டப்படாமல் குழப்பம் ஆரம்பமானது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 4 சபைகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தனக்கு மூன்று சபைகள் ஒதுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியது.
கரைத்துறைப்பற்று, துணுக்காய், புதுக்குடியிருப்பு பிரதேச சபைகள் தமக்கு வேண்டும் என்று அந்தக் கட்சி கோரியது. எஞ்சிய ஒரு சபையை ஏனைய இரண்டு கட்சிகளில் ஒன்றுக்கு ஒதுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அந்தக் கட்சிகள் இணக்கம் தெரிவிக்கவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் புதுக்குடியிருப்பு பிரதேசசபை தமக்கு வழங்கப்படவேண்டும் என்று கருத்துத் தெரிவிக்கும்போது, புளொட் அமைப்பினரால், நீங்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் பேசுகின்றீர்களா இல்லை ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் பேசுகின்றீர்களா என்று கேட்கப்பட்டதால், சூடான வார்த்தைகள் பரிமாறப்பட்டன.
கடந்த கூட்டத்தில் இணங்கிக் கொண்டதற்கு மாறாக யாழ். மாவட்டத்தில் மேலும் இரண்டு சபைகள் தமக்கு ஒதுக்கப்படவேண்டும் என்று ரெலோ வலியுறுத்தியது. அத்தோடு ஏற்கனவே ஒதுக்கப்பட்டவற்றில் நெடுந்தீவுப் பிரதேச சபைக்குப் அபதிலாக கரவெட்டியையும் அத்தோடு நல்லூர் அல்லது கோப்பாயில் ஒன்றையும் வழங்கவேண்டும் என்று நேற்றுத் தீடீர் கோரிக்கை முன்வைத்தது.
யாழ்ப்பாணத்தில் மூன்று சபைகளைக் கோரி வந்த புளொட் நேற்றுத் திடீரென 4 சபைகளைக் கோரியது. கோப்பாய், உடுவில், மானிப்பாய், சங்கானை சபைகளை அந்தக் கட்சி கேட்டமையினால் குழப்பம் ஏற்பட்டது. கோப்பாய், சங்கானை சபைகளைத் தரமுடி◌யாது என்று தமிழ் அரசுக் கட்சி மறுத்துவிட்டது.
கிளிநொச்சியில் தமிழ் அரசுக் கட்சிக்கே வாக்கு வங்கி உள்ளதால், மூன்று சபைகளுக்கும் தவிசாளர்களை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியே நியமிக்கும் என்றும், ஏனைய கட்சிகளின் வேட்பாளர்களை நியமிப்பதற்கு தயார் என்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். இதற்குப் பங்காளிக் கட்சிகள் உடன்படவில்லை.
வவுனியா மாவட்டத்தில் புளொட் அமைப்பும், ரெலோவும் ஒரே பிரதேசபையைக் கோரியமையினாலும் குழப்பம் ஏற்பட்டது. இந்தக் குழப்பங்கள் தொடர்ந்த நிலையில், மாலை 7 மணியளவில் கூட்டத்திலிருந்து ரெலோ அமைப்பின் பிரதிநிதிகளும், புளொட் அமைப்பின் பிரதிநிதிகளும் வெளியேறிச் சென்றனர். வவுனியாவில் ரெலோவின் மையக் குழுக் கூட்டம் இருப்பதாலேயே வெளியேறிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
பந்து தமிழ் அரசுக் கட்சியின் கையில்தான் என்று கூட்டத்திலிருந்து வெளியேறிச் செல்லும்போது, ரெலோவின் செயலர் சிறிகாந்தா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராசா, இ.சாள்ஸ் நிர்மலநாதன், திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா, சி.சிவமோகன், சிறிநேசன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களாக சத்தியலிங்கம், குருகுலராசா, பசுபதிப்பிள்ளை மற்றும் கட்சியின் செயலர் துரைராசசிங்கம் உள்ளிட்ட 12 பேரும், ரெலோவின் சார்பில் கட்சியின் செயலர் சிறிக்காந்தா, மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் உள்ளிட்ட 8 பேரும் புளொட் அமைப்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், மாகாண சபை அமைச்சர் சி.சிவநேசன் உள்ளிட்ட நால்வர் என்று மொத்தம் 24 பேர் கலந்துகொண்டனர்.
Post a Comment