டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு குறித்து மருத்துவக் குழுவை கொண்டு ஆய்வு செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) முடிவு செய்துள்ளது.இந்தியா - இலங்கை அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி சமீபத்தில் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தின்போது காற்று மாசுபாடு காரணமாக இலங்கை அணி வீரர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். சுரங்கா லக்மல் உள்ளிட்ட சில வீரர்கள் களத்திலும், ஓய்வறையிலும் வாந்தி எடுத்தனர்.
இதையடுத்து பீல்டிங்கின் போது இலங்கை அணி வீரர்கள் அனைவரும் முகமூடி அணிந்து கொண்டு விளையாடினார்கள். ஒருவழியாக 5 நாட்களும் நடைபெற்ற ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
இந்நிலையில் டெல்லியின் காற்று மாசு அளவு சோதனையின் முடிவை ஆய்வு செய்ய மருத்துவக் குழுவை நாடியுள்ளது ஐசிசி. இது தொடர்பாக அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் ஆலோசனைக்கூட்டத்தில் விவாதிக்கப்படவும் உள்ளது.
ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி டெஸ்ட் போட்டியின் போது நிலவிய சூழ்நிலையை ஐசிசி கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையை எதிர்காலத்தில் தவிர்க்க மருத்துவக்குழுவின் உதவியை நாடியுள்ளோம். பிப்ரவரியில் நடைபெறும் ஆலோசனைக்கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment