பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்தவாரம் சபாநாயகரிடம் சமர்ப்பிப்போம். என்றாலும் அதனை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது சந்தேகம் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.மத்திய வங்கி பிணைமுறி தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர தீர்மானித்திருப்பது தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதான பொறுப்புதாரி என அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். அவ்வாறு இருக்கையில் அவர் அந்த பதவியில் தொடர்ந்து இருக்கமுடியாது. பொதுவாக அமைச்சர் ஒருவருக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டால் அது தொடர்பாக விசாரணைகளை சுதந்திரமாக மேற்கொள்ள குறித்த அமைச்சர் அந்த பதவியில் இருக்க முடியாது.
அவ்வாறே தற்போது மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பலமான குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன. அரசாங்கத்தில் இருப்பவர்களே அதனை தெரிவிக்கின்றனர். இவ்வாறான நிலையில் மத்திய வங்கி மோசடி தொடர்பாக நீதியான விசாரணை இடம்பெறவேண்டுமாக இருந்தால் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து தற்காலிகமாகவேனும் விலகி வேறு ஒருவருக்கு அதனை வழங்க நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்.
ஆனால் பிரதமர் அவ்வாறு செய்யாமல் தொடர்ந்து அந்த பதவியில் இருந்துகொண்டு விசாரணைகளுக்கு தடைகளை ஏற்படுத்தி வருகின்றார். அத்துடன் பாராளுமன்றத்தையும் பிழையாக வழிநடத்த முயற்சிக்கின்றார். அதனாலே கூட்டு எதிர்க்கட்சி பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்வர தீர்மானித்தது. குறித்த பிரேரணைக்கு கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு வருகின்றனர். எதிர்வரும் வாரமளவில் அதனை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளோம்.
என்றாலும் நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்துக்கு கொண்டுவர அரசாங்கம் எங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்போவதில்லை. ஏனெனில் அமைச்சர் ராஜித்தவுக்கு எதிராக கொண்டுவரப்பபட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியும். அதே நிலைதான் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்ககையில்லா பிரேரணைக்கும் ஏற்படும் என்றார்
Post a Comment