மஹிந்தவிடம் அப்பம் உண்டுவிட்டு அவருக்கே துரோகம் செய்ததை போல் எமது ஆதரவில் ஜனாதிபதியாகி எமது முதுகில் குத்தும் செயற்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்து வருகின்றார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.எம்மை திருடர் என கூறும் ஜனாதிபதியும் ஒரு பிக்பொக்கட்காரர் என்பதை மறந்துவிட வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறியதானது,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொது எதிரணியுடன் இணைந்து தேர்தலில் செயற்பட்டால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை நடத்தவும் பொது எதிரணியுடன் இணைந்து தேர்தலில் களமிறங்கவும் என இரண்டையும் அவர்களால் செய்ய முடியாது.
இந்த விடயத்தை நான் தொடர்ச்சியாக பிரதமருக்கு தெரிவித்து வந்துள்ளேன். அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொது அணியுடன் இணைவதா அல்லது தனித்து செயற்படுவதா என்பது அவர்களின் பிரச்சினை. அது குறித்து நாங்கள் தீர்மானம் எடுக்க முடியாது. ஆனால் அவர்கள் இணைந்தால் அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அங்கம் வகிக்க முடியாது.
நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பல இடங்களின் தனித்து சபையை அமைக்கும் . சில சபைகளில் எமக்கு பெரும்பான்மை கிடைக்காது போகும். அவ்வாறான இடங்களில் நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தின் பிரதிபலிப்பை போலவே சபைகளையும் உருவாக்குவோம். பிரதேச சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொது எதிரணியுடன் இணைந்து சபை அமைத்தால் தேசிய அரசாங்கத்திலும் அதே நிலைமையே ஏற்படும்.
தேசிய அரசாங்கத்திலும் அவர்கள் பொது எதிரணியுடனேயே கூட்டணி அமைக்கவேண்டிவரும். இன்று பொது அணியினரின் நிலைமைகள் என்னவென்பது அனைவருக்கும் நன்றாக தெரிகின்றது. அவ்வணியின் பலர் மஹிந்த ராஜபக் ஷவை விட்டு வெளியேறி வருகின்றனர். அங்கு எவ்வாறான ஊழல் இடம்பெற்று வருகின்றது என்பதையும் அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
தேசப்பற்றாளர்கள் போன்று நடிக்கின்றனர் என அவர்களே கூறி வருகின்றனர். நாம் கூறும்போது பொய் என கூறியவர்களுக்கு இன்று அவர்களின் மூலமாகவே உண்மைகளை தெரிந்துகொள்ள முடிகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக் ஷவின் கூட்டணியில் இருந்து மைத்திரிபால சிறிசேன வெளியேறிய போது அவருக்காக பிரசாரம் செய்ய, சுவரொட்டிகள் ஒட்ட ஒரு நாதியேனும் இருக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியான நாங்களே அச்சுறுத்தலுக்கு மத்தியில், இராணுவ பலத்திற்கு மத்தியில் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி ஆசனத்தில் அமரச்செய்து அதிகாரத்தை பெற்றுக்கொடுத்தோம். இந்த நன்றிக்கடன் அவரிடம் இன்றும் உள்ளதா என்பதை அவரது மனசாட்சியிடமே கேட்கவேண்டும்.
இன்று அவருடன் இணைந்து அவரை ஆட்டி வைக்கும் டிலான், சுசில் போன்றவர்கள் அன்று இந்த கூட்டணியில் இருக்கவில்லை. இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பக்கம் இருந்து குரலெழுப்பும் எவரும் அன்று உதவிக்கு வரவில்லை. நாமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து நின்றோம். இவை இன்று அவருக்கு நினைவில் இருக்குமோ தெரியவில்லை.
நாம் அவர்களின் வாலில் தொங்கிக்கொண்டு ஆட்சியில் உள்ளதைப்போன்றதே இன்று அவர்களின் நினைப்பாக உள்ளது. நாம் அமைத்த அரசாங்கத்தில் தொங்கிக்கொண்டு வந்தவர்களே அவர்கள் அனைவரும் என்பதனை மறந்த அவர்கள் அனைவருக்கும் எதிர்வரும் 10 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியாளர்கள் சிறந்த பாடத்தை கற்பித்துக்கொடுப்பார்கள்.
மஹிந்த ராஜபக் ஷவிடம் அப்பம் உண்டுவிட்டு இறுதியில் மஹிந்தவிற்கே துரோகம் செய்ததைப்போல எமது வாக்கில் ஜனாதிபதி ஆகிவிட்டு எமக்கே முதுகில் குத்தலாம் என்ற எண்ணத்தில் ஜனாதிபதி உள்ளார் .ஜனாதிபதி எங்களை கள்வர் என கூறுகின்றார். நாங்கள் திருடர்கள் தான், ஆனால் மஹிந்த ராஜபக் ஷவின் பையில் இருந்து களவெடுத்து வெளியேறியவர் தான் இன்று ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.
அவரும் ஒரு பிக்பொக்கட் ஜனாதிபதி என்பது அவருக்கும் நினைவில் இல்லை. தானும் பிக்பொக்கட் ஜனாதிபதி என்பதை அவர் மறந்துவிடக்கூடாது. அவரை ஜனாதிபதியாக்கியதும் எமது ஜனநாயகவாத மக்கள் என்பது தான் உண்மை. இவர்கள் சத்தமாக குரல் எழுப்பியவுடன் எமது உறுப்பினர்கள் வாய்மூடி உள்ளனர். இவ்வாறு அமைதியாக இருப்பதால் பலன் இல்லை. குரலெழுப்பும் நபர்களின் செவிகள் கிழியச் செய்யும் அளவிற்கு அறைய வேண்டும். அது யாராக இருந்தாலும் பரவாயில்லை. அந்த அறை தான் எதிர்வரும் தேர்தலில் நிகழும் என்றார்.
Post a Comment