நேரு விளையாட்டு அரங்கில் 1.90 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி சறுக்கு வளையத்தை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார். சென்னை நேரு பல்நோக்கு உள்விளையாட்டரங்க வளாகத்தில் பன்னாட்டு அளவிலான போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக 1 கோடியே 90 லட்சம் செலவில் மின்னொளி வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி சறுக்கு வளையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் முதன்முறையாக சிந்தட்டிக் மேற்பரப்பினால் அமைக்கப்பட்டுள்ள இந்த சறுக்கு வளையம் 200 மீட்டர் சுற்றளவு கொண்டது.இந்த வளையத்தில் ஸ்பீடு, ஆர்ட்டிஸ்ட்டிக் மற்றும் ஹாக்கி ஆகிய பிரிவுகளில் பல்வேறு வயது பிரிவினருக்கும் ஸ்கேட்டிங் போட்டிகளை நடத்தலாம். இங்கு பயிற்சி பெறும்போது சறுக்கு விளையாட்டில் வேகமும், உறுதியும் அதிகரிக்கும். இதன்மூலம் தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் வெல்லும் வகையில் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள இயலும்.
நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, தலைமை செயலர் (பொறுப்பு) சண்முகம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ரீட்டா ஹரீஷ் தக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment