Ads (728x90)

இங்கிலாந்து அணியுடனான 5வது மற்றும் கடைசி டெஸ்டில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன் எடுத்துள்ளது. முன்னதாக, இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 346 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 233 ரன் எடுத்திருந்தது. குக் 39, ஸ்டோன்மேன் 24, வின்ஸ் 25, கேப்டன் ஜோ ரூட் 83 ரன் (141 பந்து, 8 பவுண்டரி), பேர்ஸ்டோ 5 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். டேவிட் மாலன் (55 ரன்), மொயீன் அலி இருவரும் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

மாலன் 62 ரன் (180 பந்து, 6 பவுண்டரி) எடுத்து ஸ்டார்க் வேகத்தில் ஸ்மித் வசம் பிடிபட்டார். மொயீன் அலி 30, டாம் கரன் 39 ரன் எடுத்து கம்மின்ஸ் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். ஸ்டூவர்ட் பிராடு 31 ரன் எடுக்க, அறிமுக வீரர் மேசன் கிரேன் 4 ரன் எடுத்து டக் அவுட்டானார். இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 346 ரன் குவித்து ஆல் அவுட்டானது (112.3 ஓவர்). ஆஸி. பந்துவீச்சில் கம்மின்ஸ் 4, ஹேசல்வுட், ஸ்டார்க் தலா 2, லயன் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக பேங்க்ராப்ட், வார்னர் களமிறங்கினர். பேங்க்ராப்ட் ரன் ஏதும் எடுக்காமல் பிராடு வேகத்தில் கிளீன் போல்டானார். அடுத்து வார்னருடன் உஸ்மான் கவாஜா இணைந்தார்.

நிதானமாக விளையாடிய இருவரும் 2வது விக்கெட்டுக்கு 85 ரன் சேர்த்தனர். வார்னர் 56 ரன் (104 பந்து, 6 பவுண்டரி) எடுத்து ஆண்டர்சன் வேகத்தில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் பிடிபட்டார். ஆஸ்திரேலியா 86 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து சற்றே தடுமாறிய நிலையில், கவாஜாவுடன் இணைந்த கேப்டன் ஸ்மித் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க ஸ்கோர் சீராக உயர்ந்தது.
 இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன் எடுத்துள்ளது.

கவாஜா 91 ரன், கேப்டன் ஸ்மித் 44 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 8 விக்கெட் இருக்க, இன்னும் 153 ரன் மட்டுமே பின்தங்கியுள்ள ஆஸ்திரேலியா 3ம் நாள் ஆட்டத்தில் வலுவான முன்னிலை பெற்று கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன் என்ற மைல்கல்லை அதிவிரைவாக எட்டிய வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 2வது இடத்தை வெஸ்ட் இண்டீசின் கேரி சோபர்சுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். தற்போது சூப்பர் பார்மில் உள்ள அவர் தனது 111வது இன்னிங்சில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் 68 இன்னிங்சிலேயே 6000 ரன் அடித்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget