Ads (728x90)

உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வெண்கலம் வென்றார்.

ரியாத்தில் கடந்த வாரம் உலக விரைவு செஸ் போட்டி நடைபெற்றது. இதில் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.

அதைத் தொடர்ந்து உலக பிளிட்ஸ் செஸ் போட்டி தொடங்கியது. 21 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 9 வெற்றி, 12 ‘டிரா’, ஒரு தோல்வியைச் சந்தித்தார் ஆனந்த். இறுதியில் மொத்தம் 14.5 புள்ளிகள் பெற்றிருந்த அவர் ரஷ்ய வீரர் கர்ஜாகினுடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்துகொண்டார். இதன்மூலம் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

இப்போட்டியில் நார்வே நாட்டைச் சேர்ந்த உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் 16 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்றார்.

இதுகுறித்து விஸ்வநாதன் ஆனந்த் நிருபர்களிடம் கூறும்போது, “உலக விரைவு செஸ் போட்டியில் பட்டம் வெல்வது என்பது அற்புதமான விஷயமாகும். இதைத் தொடர்ந்து நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் ஒரு சுற்றில் மட்டும் தோல்வி கண்டு மற்ற சுற்றுகளில் வெற்றியைப் பெற்றிருப்பது மிகப்பெரிய சாதனையாகும்.

உலக விரைவு செஸ் போட்டியில் பட்டம் வெல்வது சாதாரண விஷயமல்ல. ரியாத்தில் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. ஒன்று உலக விரைவு செஸ் போட்டி. மற்றொன்று உலக பிளிட்ஸ் போட்டி. இந்த பிளிட்ஸ் போட்டியில் நான் 3-வது இடத்தைப் பிடித்தேன். இந்த 2 செஸ் போட்டிகளுமே ஒன்றுக்கொன்று வித்தியாசம் கொண்டவை.

சமீபகாலமாக விரைவு, பிளிட்ஸ் வகை போட்டிகளில் எனது ஆட்டத்திறன் சரியில்லாமல் போனதாக உணர்ந்திருந்தேன். இதையடுத்து எனது ஆட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தேன். அதன்மூலம் வெற்றியைப் பெற்றேன்.

தொடர்ந்து் விரைவு செஸ் போட்டியில் 3 நாட்கள் விளையாடிவிட்டு, இடைவெளியே இல்லாமல் பிளிட்ஸ் போட்டியில் கலந்துகொண்டு விளையாடுவது சாதாரண விஷயமல்ல. பிளிட்ஸ் போட்டி 21 சுற்றுகள் அடங்கியதாகும். இதில் 14.5 புள்ளிகள் பெற்றேன்.

கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற போட்டிகளில் முக்கியமான நேரங்களில் நான் தோல்வி கண்டு வெளியேறினேன். ஆனால் இந்த முறை நான் சிறப்பாக விளையாடினேன் என்று சொல்லலாம். பிளிட்ஸ் வகை போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் அருமையாக விளையாடினார்” என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget