அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்கள், அறிக்கைகளை வெளியிடக் கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.அரச தலைவர் மைத்திரிபாலவை விமர்சித்தமைக்கு அவரிடம் மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் பணித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்குமிடையே ஏற்பட்டுள்ள சொற்போரை முடிவுக்குக் கொண்டுவந்து கூட்டு அரசை 2020ஆம் ஆண்டுவரை கொண்டு செல்லும் நோக்கிலேயே ரணிலால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில் அரச தலைவர் மைத்திரிபால, ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னைத் தரக் குறைவாகப் பேசியமை தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தார். அவர் தனது உரையை முடித்ததும் அங்கிருந்து வெளியேறியிருந்தார். தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவரைச் சமாதானப்படுத்தி அழைத்து வந்திருந்தார். இந்த நிலைமையால் கூட்டரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருந்தது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று முற்பகல் 10 மணிக்கு கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் கூடியது. தேர்தல் காலம் என்பதால் பெருமளவானோர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
அரச தலைவர் மைத்திரியினதும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரதும் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர்களும், தலைமை அமைச்சர் ரணிலுக்கும் இடையில் வாக்குவாதம் மூண்டுள்ளது. ரணில் அமைச்சர்களைச் சமாதானப்படுத்தியுள்ளார். சிறப்பு உரையையும் ரணில் நிகழ்த்தியுள்ளார்.
தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளின் போது எந்தக் காரணம் கொண்டும் மைத்திரியை எதிர்த்து பேச கூடாது. சுதந்திர கட்சி அமைச்சர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் அவர்களுக்குப் பதில் வழங்குங்கள். அதற்கு மாறாக மைத்திரிபால சிறிசேனவை விமர்சிப்பதை உடன் நிறுத்த வேண்டும்.
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பிலான ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கையொன்றின் மூலமாக உரிய பதிலை வழங்கும். அதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதிப்புகள் எதுவும் இல்லை என்று ரணில் கூறியுள்ளார்.
அப்படியென்றால் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் உங்களை விமர்சிக்கின்றனர் அல்லவா என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். இனி அவ்வாறு நடக்காத வகையில் அரச தலைவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என்று ரணில் பதிலளித்தார்.
இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை தவறாக திரிபுபடுத்தப்பட்டுள்ளது என்றும் அல்லது தவறாக அறிக்கையிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
பிக்பொக்கட் அரச தலைவர் என்று தாம் கூறவில்லை என்றும், மகிந்த ராஜபக்சவின் சட்டைப்பையில் இருந்தே, மைத்திரிபால சிறிசேனவை பிக்பொக்கட் அடித்தோம் என்றே கூறினேன் என்றும் அவர் விளக்கியுள்ளார்.
Post a Comment