ரஜினியும் கமலும் இரு கண்கள். எனக்கு இரண்டுபேருமே நண்பர்கள். இப்போது அவர்களின் அரசியல் குறித்து எதுவும் சொல்ல முடியாது. கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்று கவிஞர் வைரமுத்து நிருபர்களிடம் தெரிவித்தார்.கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. கமல்ஹாசன் தன் பிறந்தநாளின் போது அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்தினார். மேலும் அடிக்கடி சொல்லி வரும் கருத்துகளாலும் விமர்சனங்களாலும் ‘நான் அரசியலுக்கு எப்போதோ வந்துவிட்டேன்’ என்று தெரிவித்தார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், கடந்த மாதத்தின் கடைசிவாரத்தில் தன்னுடைய ரசிகர்களை தினமும் சந்தித்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.
அந்த நிகழ்ச்சியின் இறுதிநாளான டிசம்பர் 31-ம் தேதி, 'நான் அரசியலுக்கு வருகிறேன். வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு அவகாசம் இல்லை. எனவே அதில் போட்டியிடவில்லை. அடுத்து வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலின் போது, சொல்லுகிறேன். அதையடுத்து வரப்போகும் சட்டப்பேரவை தேர்தலில், 234 தொகுதிகளிலும் நம் படை போட்டியிடும் என்று ரசிகர்களிடம் அறிவித்தார் ரஜினி.
இதையடுத்து சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்துக்குச் சென்று அங்கு உள்ள மடாதிபதிகளைச் சந்தித்தார். அடுத்து திமுக தலைவர் கருணாநிதியை, கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தார். பிறகு எம்ஜிஆர் மன்றத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனைச் சந்தித்தார் ரஜினிகாந்த்.
இந்தநிலையில், கமல் மற்றும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கவிஞர் வைரமுத்துவிடம் கேள்வி கேட்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்துக்கு வந்திருந்த வைரமுத்துவிடம், கமல், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்துக் கேட்டதற்கு, ''கமலும் ரஜினியும் எனக்கு இரண்டு கண்கள். இரண்டு பேருமே எனக்கு நண்பர்கள். இப்போது எதுகுறித்தும் சொல்லமுடியாது. அதற்கான கால அவகாசம் வேண்டும். அதன் பிறகு சொல்லுகிறேன்'' என்று தெரிவித்தார் வைரமுத்து.
Post a Comment