அரசியலுக்கு நேரடியாக வருகிறேன். எப்போது என்று சொல்லமுடியாது. அநேகமாக, இன்னும் ஒருமாதத்தில் அரசியலுக்கு வந்துவிடுவேன் என்று இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்தார்.தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் மரணம், கருணாநிதியின் உடல்நலக் குறைபாடு ஆகியவற்றால் வெற்றிடம் உருவாகியிருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். இந்த நிலையில், அதிமுக இரண்டாக உடைந்தது. பிறகு எடப்பாடி அணியும் ஓபிஎஸ் அணியும் சேர்ந்தது. தினகரன் விலக்கி வைக்கப்பட்டார்.
இதையடுத்து ஆர்கே நகர் இடைத்தேர்தல் இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்டு தேர்தலும் நடைபெற்றது. இதில் சுயேச்சையாக, குக்கர் சின்னத்தில் நின்ற டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்.
இதனிடையே கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் அரசியலுக்கு வருவது குறித்து வெளிப்படையாகவே அறிவித்துவிட்டனர். ஆர்கே நகர் தேர்தலில் திடீரென்று நடிகர் விஷால் போட்டியிட்டார். ஆனால் அவரின் வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டது.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. எம்ஜிஆருக்கு மிகவும் பிரியமாகவும் நெருக்கமாகவும் இருந்தவர் இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ். எம்ஜிஆர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, தமிழகம் முழுவதும் சென்று பாக்யராஜ், அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்தார்.
எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு ஜானகி அணியை ஆதரித்தார். அதன் பின்னர், அவரே தனிக்கட்சி தொடங்கினார். நீண்டகாலத்துக்குப் பிறகு திமுகவில் சேர்ந்து அந்தக் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்தார்.
இப்போது 'நான் அரசியலுக்கு நேரடியாக வர முடிவு செய்துவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.
இயக்குநர் பாக்யராஜ், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது, ''அரசியலுக்கு நேரடியாக வரக்கூடிய வாய்ப்பும் காலமும் நெருங்கிவிட்டது. அந்தச் சூழல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இப்போதைக்கு எதுவும் சொல்லமுடியாது. அதற்குக் கொஞ்சம் அவகாசம் தேவை.
கிட்டத்தட்ட, நேரடி அரசியல் குறித்து முடிவு எடுக்கும் வாய்ப்பு வந்துவிட்டது என்றே நினைக்கிறேன். அதற்கான காலம், நீண்டகாலம் என்றெல்லாம் நினைக்கவேண்டாம். இன்னும் ஒருமாதத்திற்குள் முடிவைச் சொல்லுவேன். யாருக்கு ஆதரவு, ஏன் ஆதரவு என்றெல்லாம் அப்போது தெரியும். கொஞ்சம் பொறுத்திருங்கள்'' என்று தெரிவித்தார் பாக்யராஜ்.
Post a Comment