அமெரிக்க அரசின் நிர்வாக முடக்கம் மூன்று நாட்களுக்குப் பிறகு நீங்கியுள்ளது.அமெரிக்க செனட் அவையில் செலவுக்கு நிதி ஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததால் கடந்த 20-ம் தேதி முதல் அந்த நாட்டின் அரசு நிர்வாகம் முடங்கியது. தேசிய பூங்காக்கள், நினைவுச் சின்னங்கள் மூடப்பட்டன. பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை. 8 லட்சம் அரசு ஊழியர்கள் தற்காலிக விடுப்பில் அனுப்பப்பட்டனர். ராணுவம், போலீஸ் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து இயங்கின.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் ஆளும் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. ஆனால் நூறு பேர் கொண்ட செனட் அவையில் ஆளும் கட்சிக்கு 51 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். செலவுக்கு நிதி ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற 60 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனவே ஜனநாயக கட்சி தலைவர்களுடன் அதிபர் ட்ரம்ப் ஆலோசனை நடத்தினார். இதில் சுமூக தீர்வு எட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து மசோதா தொடர்பாக பிரதிநிதிகள் அவையில் நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 266 பேர் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. 150 பேர் எதிராக வாக்களித்தனர். இதேபோல செனட் அவையில் 81 உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. 18 பேர் எதிராக வாக்களித்தனர்.
ஆளும் கட்சி வாக்குறுதி
“இளம் குடியேற்றவாசிகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்கப்படும். குடியேற்றவாசிகளுக்கு சாதக மாக அரசு செயல்படும்” என்று செனட் அவையின் குடியரசு கட்சித் தலைவர் மிட்ச் மெக்கெனால் அளித்த உறுதியை ஏற்று ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
ஆனால் ஆளும் கட்சியின் வாக்குறுதியை ஜனநாயக கட்சி யைச் சேர்ந்த 18 செனட் உறுப்பினர்கள் ஏற்கவில்லை. அவர்களில் ஒருவரான கமலா ஹாரிஸ் கூறியபோது, “இளம் குடியேற்றவாசிகள் விவகாரத்தில் அரசு மழுப்பலான பதிலை தெரிவித்து வருகிறது. குடியேற்றவாசிகளின் நலனுக்காக தொடர்ந்து போராடு வோம்” என்று தெரிவித்தார். கமலா ஹாரிஸின் தாய் சியாமளா கோபாலன் சென்னையில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர். அவரது தந்தை டொனால்டு ஹாரிஸ் ஜமைக்காவைச் சேர்ந்தவர். அடுத்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக களமிறங்க கமலா ஹாரிஸ் திட்ட மிட்டுள்ளார்.
மீண்டும் அரசு முடங்குமா?
வரும் பிப்ரவரி 8-ம் தேதி வரையிலான அரசு நிர்வாகச் செலவுக்காக மட்டுமே தற்போது மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியேற்றவாசிகள் விவகாரத்தில் ஆளும் கட்சி தனது வாக்குறுதியை காப்பாற்ற தவறினால் மசோதா மீண்டும் செனட் அவைக்கு வரும்போது தோற்கடிக்கப்படலாம், அரசு நிர்வாகம் மீண்டும் முடங்கும் வாய்ப்புள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment