
கனடா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அவரது தோழியைக் கொலை செய்ததை போலீஸார் அப்பெண்ணின் ஃபேஸ்புக்கில் இருந்த செல்ஃபியைக் கொண்டு உறுதி செய்துள்ளனர்.
செனி ரோஸ் ஆண்டனி (21) இவரது தோழி பிரிட்னி கார்கல் (18). ரோஸ் தனது தோழியை 2 வருடங்களுக்கு முன்னர் கொலை செய்துள்ளார்.
பிரிட்னி கார்கல் கொலையுண்டு கிடந்த இடத்தின் அருகே ஒரு பெல்ட் கிடந்தது. அதை போலீஸார் முக்கியமான தடயமாக கருதினர். கார்கல் கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிந்தது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்துவந்தது. போலீஸாருக்கு பிரிட்னியின் தோழி ரோஸ் ஆண்டனி மீதும் சந்தேகம் இருந்தது.
இந்நிலையில், ஆண்டனியின் ஃபேஸ்புக் பக்கத்தை போலீஸார் சோதித்தபோது கார்கல் கொல்லப்பட்ட சில மணி நேரங்களுக்கு முன்னர் இருவரும் செல்ஃபி ஒன்று எடுத்துக்கொண்டு அதை ஃபேஸ்புக்கில் ரோஸ் பகிர்ந்திருந்தனர்.
அந்தப் படத்தில் ரோஸ் இடுப்பில் அணிந்திருந்த பெல்ட்டும் கார்கல் கொலையான இடத்தில் கிடந்த பெல்ட்டும் ஒரே மாதிரியாக இருந்தது. இந்த கோணத்தில் போலீஸார் விசாரணையைத் தொடர்ந்தனர். ரோஸ் தான் கொலையாளி என்பது உறுதியானது.
நீதிமன்றத்தில் ரோஸ், தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். சம்பவம் நடந்த அன்று இருவரும் மது அருந்தியிருந்ததாகவும் வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும் கூறினார். பின்னர் ஆத்திரத்தில் கார்கலை கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார்.
நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டு பேசிய ரோஸ், "நானே என்னை மன்னிக்க மாட்டேன். நான் என்ன சொன்னாலும்; எதை செய்தாலும் அவளை திரும்பிக் கொண்டுவர முடியாது. என்னை மன்னித்து விடுங்கள். இது நடந்திருக்கவே கூடாது" எனக் கதறினார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட ரோஸுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Post a Comment