Ads (728x90)

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அரையிறுதியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி படுதோல்வியடைந்தது. இந்திய அணி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் பாக்., இழந்தது. இந்த வெற்றி மூலம் பைனலுக்கு தகுதி பெற்ற இந்திய அணி பிப்.,3 ம் தேதி நடக்கும் பைனலில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

நியூசிலாந்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்துவரும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய துவக்க ஜோடி பிரித்வி ஷா(41), மன்ஜோட் கல்ரா(47) நல்ல துவக்கம் தர அடுத்து களமிறங்கிய ஷூப்மன் கில் அதிரடி ஆட்டம் ஆடினார். அவருக்கு ஹார்விக் தேசாய்(20) அனுகுல் ராய்(33) ஒத்துழைப்பு தந்தனர். கடைசி நேரத்தில் ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷூப்மன் கில் சதம் விளாசினார். இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன் குவித்தது. ஷூப்மன் கில் 102 ரன்னுடனும், இஷான் போரல் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். சதம் விளாசிய ஷூப்மன் கில்லை, ஐ.பி.எல்., ஏலத்தில் ரூ.1.8 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து 273 ரன்னை வெற்றி இலக்காக கொண்டு பாக்., தனது பேட்டிங்கை தொடங்கியது. ஆனால், இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், பாக்., அணி வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக சொற்ப ரன்னுக்கு அவுட்டானார்கள். அந்த அணி இறுதியில் 29.3 ஓவரில் 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்திய 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget