ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கிடையே மூண்டுள்ள சொற்போர்களால் கூட்டர சின் ஆயுள் கேள் விக்குறியாகியுள்ளது.இதுதொடர்பில் வெளிநாட்டுத் தூதுவர்களும், இராஜதந்திரிகளும் சிறப்பு அவதானம் செலுத்தியுள்ளனர்.
ஐ.தே.க. மற்றும் சு.கவினரைச் சமரசப்படுத்தி கூட்டு அரசின் ஆயுளை அதிகரிக்கும் நடவடிக்கைகளிலும் அவர்கள் இறங்கியுள்ளனர். இரு கட்சிகளிலும் உள்ள நடுநிலைவாத உறுப்பினர்களுடன் வெளிநாட்டுத் தூதுவரகள் சிலர் பேச்சு நடத்தினர் என்றும் தெரியவருகின்றது.
இரு பிரதான கட்சிகளுக்கும் இடையே கூட்டு அரசு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தம் கடந்த டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சிக்கின்றனர்.
தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பரப்புரைகளும் ஆரம்பித்திருக்கும் நிலையில் சொற்போர் தீவிரமடைந்துள்ளது. இப்போது கூட்டரசு எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்ற நிலைமை தோன்றியுள்ளது.
அந்த நிலைமை ஏற்பட்டால் அரசியல் உறுதித்தன்மை பறிபோகும். முக்கிய விடயங்களைக் கையாள முடியாத நிலைமையும், மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இல்லாத நிலைமையும் ஏற்படும். புதிய அரசமைப்பை உருவாக்க முடியாத நிலைமையும் ஏற்படும்.
ஆட்சி மாற்றத்துக்கு பன்னாடுகள் மறைமுக உதவிகளை வழங்கியிருந்தன. அதேபோன்று ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்குக் கால அவகாசம் பெற்றுக்கொடுப்பதற்கான பின்னணியிலும் சில வெளியாட்டுத் தூதுவர்கள் செயற்பட்டிருந்தனர்.
இந்தப் பின்னணியில் திட்டமிட்ட அடிப்படையில் கூட்டரசின் ஆயுள் நீடிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
தற்போதுள்ள கொதிநிலையைத் தணித்து இரு தரப்பினரையும் சமரசப்படுத்தும் நடவடிக்கைளில் அவர்கள் இறங்கியுள்ளனர்.
Post a Comment