ஊழல், மோசடிகளை மூடிமறைக்க கூட்டு அரசிலிருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியை வெளியேற்றிவிட்டு ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டு எதிரணியும் இணைந்து ஆட்சியமைக்க சதித்திட்டம் தீட்டியுள்ளன.இவ்வாறு அமைச்சர் மகிந்த அமரவீர குற்றஞ்சாட்டினார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தெரிவித்தாவது-,
மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணைசெய்ய அரச தலைவர் ஆணைக்குழு வொன்றை மைத்திரிபால அமைத்தார். அந்தக் குழுவால் ஒன்றும் நடைபெறப்போவதில்லை என்று பெரியளவிலான பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இப்போது இலங்கை வரலாற்றை இந்த அறிக்கை மாற்றியமைத்துள்ளது.
இந்த மோசடியை மக்களிடம் கொண்டுசெல்வதில் ஊடகங்கள் பெரும் பங்கை வகித்துள்ளன. கடந்த காலத்தில் பல ஆணைக்குழுக்களும், கோப் குழுக்களும் அமைக்கப்பட்டு ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
கடந்த காலத்தில் 30ஆயிரம் மில்லியன் ரூபா மதிப்பிலான மோசடியையும் நாங்கள் கோப் குழு மூலம் கண்டுபிடித்திருந்தோம். அந்த அறிக்கைகளை ஆணைக்குழுவை நியமித்தவர்கள் கூட பார்த்திருக்கமாட்டார்கள். நேற்றுத்தான் இரண்டாவது ஒப்பரேசனை மைத்திரி ஆரம்பித்துள்ளார்.
மறுபுறத்தில் பெரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட அரச தலைவர் ஆணைக்குழுவின் 34 அறிக்கைகளும் கிடைத்துள்ளன. அதில் குற்றம் சுமத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சுதந்திரக் கட்சியினர். அவர்கள் தற்போது வேறு ஒரு தரப்புடன் உள்ளனர்.
எவராக இருந்தாலும் மைத்திரி கட்டாயம் அதியுச்ச தண்டனையை வழங்கும் வகையில் செயற்படுவார்.கூடிய விரைவில் வழக்குகள் தொடுக்கப்பட்டு விரைவில் மோசடியாளர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் வகையில் சிறப்பு நீதிமன்றமொன்றை அமைக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டு எதிரணியும் இணைந்து கூட்டு அரசிலிருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியை வெளியேற்றிவிட்டு அரசை அமைக்க சதித்திட்டமொன்றைத் தீட்டியுள்ளனர். நாங்கள் அரசிலிருந்து வெளியேறினால் சக்திவாய்ந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசே அமையும்.
அதற்காகவே கூட்டு எதிரணியில் உள்ளவர்களும், ஐக்கிய தேசியக் கட்சியினரும் அரசிலிருந்து எம்மை வெளியேற வேண்டும் என்று கூறுகின்றனர். கூட்டு எதிரணியில் சிலர் சிறிகொத்தாவிலும், அலரிமாளிகையிலும் பேசுகின்றனர். நாங்கள் அரசில் இருப்பதால்தான் மைத்திரி வலுவுடன் உள்ளார் – என்றார்.
Post a Comment