Ads (728x90)

ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டவையாக இருந்தபோதிலும் இரு கட்சிகளின் தலைவர்களும் தமது கட்சிக்காக செயற்பட்டதைவிட நாட்டுக்காகவே கடந்த மூன்று ஆண்டுகளும் செயற்பட்டுள்ளனரென பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பலர் தெரிவித்தாலும் அது உண்மையில் சண்டையல்ல, அவரவர் கருத்துக்களிலுள்ள வேறுபாடு மாத்திரமே என கொலன்னாவை  ஸ்ரீ ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லவிடாமல் தடுப்பதானது மக்கள் கொடுத்த தேர்தல் ஆணையை மீறும் செயற்பாடாகும். கடந்த இரண்டு வருடங்களில் நாங்கள் பல பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தந்துள்ளோம்.  எதிர்வரும் இரண்டு வருடங்களும் மிக முக்கியமான வருடங்களாகும். இந்தக் காலப்பகுதியில்தான் பல பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டி இருப்பதுடன் இரண்டு பிரதான கட்சிகளும் சேர்ந்து செயற்படவேண்டிய கட்டாயமும் உள்ளது.

இன்று ஊடக சுதந்திரம் உண்டு. சுதந்திரமாக வீதியில் நடந்து செல்ல முடியும். ஜனநாயகம் இங்கு கூடுதலாக உள்ளது. மக்களுக்கு சுதந்திரமாக இங்கு வாழக்கூடியதாக உள்ளது. ஆனால் திருடர்களை பிடிப்போம் என்று மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாமையே எமக்கு  கவலையாக உள்ளது. இதுவே இன்று பிரச்சினையாக உள்ளது. ஆனால் நாடு என்ற ரீதியில் நாங்கள் செய்ததை எண்ணி மகிழ்சியடைகின்றோம்.

தற்போது எமக்கு முக்கியமானது கட்சி அரசியல் அல்ல. எமக்கு எந்த வேளையிலும் கட்சி ஒன்றை உருவாக்க முடியும்.  ஆனால் சிறந்த நாட்டை உருவாக்க முடியாது. ஆகவே இரண்டு கட்சிகளும் இணைந்து இனிவரும் காலத்தில் நாட்டுக்காக வேலைசெய்யவேண்டிய தேவையுள்ளது. இதை செய்யாவிட்டால் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் அளித்த ஆணையை மீறுவதாகுமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget