ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, 23-ம் நிலை வீராங்கனையன தாய்லாந்தின் சோசுவாங்குடன் மோதுகிறார். அதேவேளையில் சாய்னா நெவால், முதல் நிலை வீராங்கனையான தைவானின் டாய் சூ யிங்கை சந்திக்கிறார்.ரூ.6.5 கோடி பரிசுத் தொகை கொண்ட மதிப்புமிக்க ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் தொடர் வரும் மார்ச் 14-ம் தேதி முதல் 18-ம் தேதிவரை இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் நகரில் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் 23-ம் நிலை வீராங்கனையன தாய்லாந்தின் சோசுவாங்குடன் மோதுகிறார். உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள சிந்துவுக்கு இந்த ஆட்டம் எளிதாக அமையக்கூடும் என கருதப்படுகிறது.
முதல் சுற்றை அவர், எளிதாக கடக்கும் பட்சத்தில் அடுத்த சுற்றில் 10-ம் நிலை வீரராங்கனையான அமெரிக்காவின் பிவென் ஜாங்குடன் மோதக்கூடும். 11-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நெவாலுக்கு முதல் சுற்று கடினமாக அமைந்துள்ளது. அவர், முதல் நிலை வீராங்கனையான தைவானின் டாய் சூ யிங்கை சந்திக்கிறார். ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடரில் கடந்த 2015-ம் ஆண்டு சாய்னா நெவால் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தார். தற்போது முழு உடல் தகுதியுடன் உள்ள அவர், மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் நடைபெற்ற இந்தோனேஷிய ஓபன் தொடரின் இறுதி ஆட்டத்தில் சாய்னா நெவால், டாய் சூ யிங்கிடம் தோல்வியடைந்திருந்தார். இதற்கு இம்முறை சாய்னா பதிலடி கொடுக்கக்கூடும் என கருதப்படுகிறது. எனினும் அதற்கு சாய்னா கூடுதல் முயற்சியை மேற்கொள்ள வேண்டியது இருக்கும். ஏனெனில் டாய் சூ யிங், ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடரில் நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்குகிறார்.
ஆடவர் பிரிவில் உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், தனது முதல் சுற்றில் 24-ம் நிலை வீரரான பிரான்சின் பிரைஸ் லெவர்டெஸூடன் மோதுகிறார். கடந்த ஆண்டில் 4 தொடர்களில் பட்டம் வென்று சாதனை படைத்த ஸ்ரீகாந்த் மீது இம்முறை அதிக எதிர்பார்ப்பு உள்ளது. மற்ற இந்திய வீரர்களான சாய் பிரணீத், பிரணாய் ஆகியோருக்கு முதல் சுற்று கடினமாக அமைந்துள்ளது. 14-ம் நிலை வீரரான சாய் பிரணீத் தனது முதல் சுற்றில் 5-ம் நிலை வீரரான கொரியாவின் சன் வான் ஹோவுடன் மோதுகிறார்.
11-ம் நிலை வீரரான பிரணாய் முதல் சுற்றில், 8-ம் நிலை வீரரான சீன தைபேவின் சோ டியன் செனுடன் மோதுகிறார். ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஷிராக் ஷெட்டி, சாட்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி ஜோடி, ஜப்பானின் தாகுரோ ஹோகி, கோபயாஷி ஜோடியை சந்திக்கிறது. அதேவேளையில் மனு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடி தங்களது முதல் சுற்றில் இங்கிலாந்தின் மார்க்கஸ், கிறிஸ் லாங்ரிட்ஜ் ஜோடியுடன் மோதுகிறது.
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, ஷிக்கி ரெட்டி ஜோடி தங்களது முதல் சுற்றில் ஜப்பானின் மிசாகி மட்சுடோமோ, அயகா தகஹாஸி ஜோடியை சந்திக்கிறது. ஜக்காம்புடி மெக்னா, பூர்விஷா ராம் ஜோடி முதல் சுற்றில் ஜப்பானின் ஷிஹோ தனகா, ஹோகரு யோனெமோடோ ஜோடியுடன் மோதுகிறது.
Post a Comment