Ads (728x90)

இந்தியாவுடன் இணைந்து ராணுவ கூட்டுப் பயிற்சியில் ஈடுபடப் போவதாக நேபாளம் அறிவித்துள்ளது.

இந்த கூட்டுப் பயிற்சியானது உத்தராகண்ட் மாநிலத்தில் நடைபெறவுள்ளது. இதன்படி, வனப் பகுதியில் போர்ப்பயிற்சி, துப்பாக்கிச் சுடும் பயிற்சி, தீவிரவாத தடுப்பு நடவடிக்கை பயிற்சி, பேரிடர் காலங்களை எதிர்கொள்வது எப்படி என்பது போன்ற பயிற்சிகளில் இந்திய ராணுவ வீரர்களுடன் நேபாள ராணுவ வீரர்கள் இணைந்து மேற்கொள்ளவுள்ளனர்.

இத்தகவலை நேபாளத்திலுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நேபாள நாட்டின் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சராக நேற்று முன்தினம் பொறுப்பேற்ற ஈஸ்வர் பொகாரல், இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இந்தியா - நேபாள நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் இந்த ராணுவ கூட்டுப் பயிற்சிக்கு சூர்ய கிரண் என்ற பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் 13-வது முறையாக நடைபெறவுள்ள இந்த கூட்டு ராணுவப் பயிற்சி, பிதோரகார் பகுதியில் 2 மாதத்துக்கு நீடிக்கும் எனத் தெரிகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் கூட்டு ராணுவப் பயிற்சி என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 12-வது ஆண்டு சூர்ய கிரண் பயிற்சியானது காத்மாண்டுவில் நடைபெற்றது.

இந்தியாவின் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் சில தினங்களுக்கு முன்பு காத்மாண்டுவில் நடைபெற்ற நேபாள ராணுவ தின நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அதைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget