Ads (728x90)

ஐ.நா கூட்டத்தில், இஸ்ரேலுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாலஸ்தீனம் தெரவித்தபோதும், ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்கா விடாபிடியாக இருந்ததால் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

மத்திய கிழக்கில் பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் நீடித்து வருகிறது. ஜெருசலேம் நகருக்கு பாலஸ்தீனம் உரிமை கொண்டாடி வரும் நிலையில், அந்நகரை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா சமீபத்தில் அங்கீகரித்தது. இதன் பிறகு பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

பாலஸ்தீன பிரச்சினை தொடர்பாக ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாலஸ்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது

‘‘பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையிலான பிரச்சினையை முடிவுக்க கொண்டு வருவதற்கு சர்வதேச அமைதி மாநாடு நடத்த வேண்டும். அமைதி பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பம். இருதரப்பு ஒப்பந்தங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்த வேண்டும்.

பாலஸ்தீனம் தற்போது பார்வையாளராகவே ஐநா கூட்டத்தில் கலந்து கொள்கிறது. பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தான் அடுத்த தலைமுறையினருக்கு அவசியமான ஒன்று. பாலஸ்தீனத்திற்கு ஐநாவின் முழுமையான உறுப்பு நாடு என்ற அங்கீகாரம் தேவை.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்ததன் மூலம் பிரச்சினை மேலும் சி்க்கலாகியுள்ளது’’ எனக்கூறினார்.

இதற்கு பதிலளித்த ஐநாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறுகையில் ‘‘பாலஸ்தீனமும், இஸ்ரேலும் அமைதி வழியில் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பது தான் அமெரிக்காவின் எண்ணம். ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தது என்பது அந்நாட்டுடனான உறவு சம்பந்தப்பட்ட விஷயம்.

இதனை பாலஸ்தீன பிரச்சினையும் சம்பந்தப்படுத்தி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு இதில் விருப்பமில்லாமல் இருக்கலாம். அதற்காக நாங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முடியாது’’ எனக்கூறினார்.

இந்த பேச்சால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து மத்திய கிழக்கிற்கான ஐ.நா அமைதி தூதர் நிக்ஹோலே கூறுகையில் ‘‘நீண்ட நாட்களாக நடந்து வரும் மோதலால் இருதரப்பும் இழப்புகளையே அதிகம் சந்தித்துள்ளன’’ என்றார். இதை தொடர்ந்து முக்கிய முடிவுகள் ஏதும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிவுற்றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget