சிரியாவில் 2013ம் ஆண்டுக்கு பிறகு பெரிய அளவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசு படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் 48 மணிநேரத்தில் 250 கொல்லப்பட்டுள்ளனர். 1,200 பேர் காயமடைந்துள்ளனர்.சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலகக் கோரி, கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டு கலவரம் மூண்டது. இதில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், சிரிய அரசுப் படைக்கு ஆதரவாக ரஷ்யா அவ்வப்போது வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த மோதலில் 400,000 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலை அரசு படைகள் தீவிரப்படுத்தியுள்ளன. டமாஸ்கஸ் நகருக்கு அருகில் உள்ள கிழக்கு கவுடா பகுதியில் அரசுப்படை விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. நகரம், கிராமம் என கிளர்ச்சியாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்து வருகிறது. இதுமட்டுமின்றி ஏவுகணைகளை வீசியும் சில பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படுகிறது.
இதில் கொத்து கொத்தமாக மக்கள் மடிந்து வருகின்றனர். கடந்த 48 மணிநேரத்தில் நடந்த தாக்குதலில் 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 50 பேர் குழந்தைகள் ஆவர். இதுமட்டுமின்றி தாக்குதலில் 1,200 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த 2013ம் ஆண்டு ரசாயன குண்டுகளை வீசி அரசு படை நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் மடிந்தனர். இந்த தாக்குதலுக்கு பிறகு மிகப்பெரிய தாக்குதலை சிரியா அரசு படைகள் தற்போது நடத்தி வருகின்றன. நிலைமையை கண்காணித்து வருவதாக ஐ.நா அமைதி குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே துருக்கியையொட்டிய சிரியா எல்லையில் குர்துஸ் பகுதியில் துருக்கி படைகள் நுழைந்து வருகின்றன. எனவே துருக்கி படைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு அங்கு சிரியா அரசு படைகள் விரைந்துள்ளன. இதை தொடர்ந்து துருக்கி எல்லையிலும், சிரியா நாட்டு விமானப்படை குண்டு வீச்சு தாக்குதலை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment