Ads (728x90)

அரசியல் கள்வர்களை கருவறுக்கும் வேலையை நான் ஏற்கெனவே ஆரம்பித்து விட்டேன். கள்வர்களற்ற மூவினத்தவரையும் ஒரே குடும்பமாகக் காண்பதே எனது கனவு இவ்வாறு ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஏறாவூர் மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு திரட்டும் பரப்புரைகள் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி  இதனைத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது,

போர் முடிந்தாலும் பிரச்சினைகள் தீர்ந்திருக்காத ஒரு கால கட்டத்தில் நான் அரச தலைவரானேன். ராஜபக்ச அரசாட்சிக் காலத்திலே பலவிதமான கஷ்டங்களும், ந‪ஷ்டங்களும் துன்புறுத்தல்களும் இருந்தன.
சிங்கள தமிழ் முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை.  அக் காலத்திலே பலபேர் காணாமலாக்கப்பட்டார்கள். அப்பாவிகள் தெருக்களிலே கொலை செய்யப்பட்டிருந்தார்கள். பத்திரிகைகளில் உண்மையை எழுதியர்கள் சுடப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தார்கள்.

முழு உலகிலும் பிரபலமான தாஜுதின் போன்ற சிறந்த வீரர்கள் தெருவிலே கொல்லப்பட்டார்கள். அது எவ்வாறு நடந்தது என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். இந்த நாட்டிலே அன்று ஜனநாயகம் இருக்கவில்லை.

சுதந்திரம் இருக்கவில்லை. தொலைபேசியில் கூட பேசமுடியவில்லை. எல்லாத் தொலைபேசி உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்பட்டன. உலக நாடுகள் பல எங்கள் நாட்டின் மீது கண்டனக் கணைகளைத் தொடுத்தன. ஐநா சபை எங்களோடு கோபித்துக் கொண்டது.

உலகிலுள்ள 200 இற்கு மேற்பட்ட நாடுகளில் நான் 5 நாடுகள் கூட எமக்கு ஆதரவாக இருந்திருக்கவில்லை. ஐநா செயலாளரைச் சந்தித்தேன். எனது நாட்டை சரியாககக் கட்டியெழுப்ப நீங்கள் உதவுங்கள் என்றேன். எங்களைத் தொல்லைப் படுத்தாதீர்கள் என்று மன்றாடினேன்.

மனிதக் கொலைகளை நிறுத்துவேன், நாட்டில் ஆட்கள் காணாமல் போகும் நிலைமையை இல்லாமல் செய்வேன் என்று நான் வாக்குறுதியளித்தேன்.
கடந்த மூன்று வருட காலத்திலும் இந்த நாட்டிலே எவரும் தெருக்களில் கொல்லப்படவுமில்லை, காணாமலாக்கப்படவுமில்லை. செய்தியாளர்கள் நாட்டை விட்டுச் செல்லவில்லை. எல்லாவற்றையும் நிறுத்தினேன். எனக்கு வாழ்க்கையிலே ஒரு கனவு இருக்கிறது.

சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் புன்னகைத்துக் கொண்டு ஒரு குடும்பமாக வாழ வேண்டும் என்பதுதான் எனது கனவு. அதனை நான் கண்ணாரக் காண வேண்டும்.

இலங்கையரான நாங்கள் ஒரு குடும்பம் போன்று வாழுகின்றோம் என்பதை முழு உலகுக்கும் பறை சாற்ற வேண்டும். அச்சமின்றி பரஸ்பர நம்பிக்கையோடு நாங்கள் வாழ வேண்டும்.

இந்த நாட்டிலே படித்தவர்களுக்கு முக்கியமான பொறுப்புக்களை வழங்க வேண்டும். பெண்கள் முன்னேற நாம் உதவ வேண்டும்;. தவறான பிரதிநிதிகள் கோலோச்ச நான் ஒரு போதும் இடமளிக்க மாட்டேன். அதிகாரக் கள்ளவர்களால்தான் இந்த நாடு பாழாய்ப் போனது. எல்லோரும் அல்ல ஆனால் கூடுதலானோர் களவெடுக்கிறார்கள். கள்வர்களை நான் வெளியே தள்ளுவேன்.

ராஜபக்ஷ காலத்தில் நாடு எப்படி சூறையாடப்பட்டது போன்று இந்த அரசின் காலத்திலும் சில கூட்டம் ஒன்று சேர்ந்து களவாடினார்கள். யாராக, எவராக இருந்தாலும் கொள்ளையடிப்பதற்கு நான் இடமளிக்க மாட்டேன்.
நான் அரசியலுக்காக நல்லதொரு குழுவை உருவாக்கிக் கொண்டிருக்கின்றேன்.

எமது நாட்டிலே அரசியல்வாதிகள் எவ்வளவுதான் களவு செய்தாலும், தவறு செய்தாலும் தண்டனை வழங்கப்படுவதில்லை. ஆனால், தண்டனை வழங்குவதை நான் ஆரம்பித்து விட்டேன்.

நான் கட்சிபேதமின்றி கள்வர்களை தயவு தாட்சண்யமின்றித் தண்டிப்பேன். எனக்கு இந்த நாடு நாட்டு மக்களின் முன்னுரிமையைத் தவிர தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலொன்று இல்லவே இல்லை. என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget