வடக்கு மாகாணத்தில் ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நிதியில், உற்பத்தியாளர் கூட்டுறவுத் திட்டத்தின் ஊடாக 50 தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன. நிதி அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோர் இந்த விடயத்தை யாழ்ப்பாணத்தில் தெரிவித்தனர்.நிதி அமைச்சர் மற்றும் இலங்கை வங்கி ஆளுநர் ஆகியோர் நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்தனர். யாழ். மாவட்டச் செயலகத்தில், வர்த்தக சமூகத்தினர், கூட்டுறவுத் துறையினர், வங்கித் துறையினர் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு வர்த்தக சமூகத்துக்கு இலகு கடன் அல்லது மானியங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அவர்களிடம் முன்வைக்கப்பட்டது. வடக்கில் இருந்து 300 தொழில் முயற்சியாளர்கள், ஒவ்வொருவரும் 3 தொடக்கம் 5 லட்சம் ரூபா செலவு செய்து திட்டங்களைச் சமர்பித்தபோதும் யு.எஸ்.எயிட் ஊடான உதவித் திட்டம் வடக்கைச் சேர்ந்த எவருக்கும் கிடைக்கவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது.
அந்தத் திட்டத்தைப் பெற்றுக் கொண்ட தென்பகுதியைச் சேர்ந்தவர்களே இங்கு வந்து தொழில்துறையினை ஆரம்பித்துள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
நிதி நிறுவனங்கள், மக்களுக்கு கடன் வழங்கி அவர்களை கடனாளிகளாக்கியுள்ளனர். அவர்கள் வரையறையில்லாமல் செயற்பட்டு இங்கு பலரைக் கடனாளியுமாக்கியுள்ளனர் என்றும் அமைச்சருக்கும் ஆளுநருக்கும் சுட்டிக்காட்டப்பட்டது. பலர் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் உயிரை மாய்த்துள்ளனர் என்கிற விவரமும் தெரிவிக்கப்பட்டது.
வடக்கில் தொழில் துறையினர், சுயதொழில் முயற்சி செய்வோர் பெற்றுக் கொண்ட வங்கிக் கடனை இல்லாமல் செய்யவேண்டும், ஆகக் குறைந்தது அதற்கான வட்டியையாவது இல்லாமல் செய்யவேண்டும் என்றும் கேட்கப்பட்டது.
காங்கேசன்துறை துறைமுகத்துக்கு இப்போதும் 3 ஆயிரம் மெற்றிக் தொன்னுடன் கப்பல் வரமுடியும். துறைமுகத்தைப் பயன்பாட்டுக்கு அனுமதித்தால் வடக்கில் வர்த்தகம் விரிவாகும் என்பதும் சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
கூட்டுறவுத் துறை
போரினால் கூட்டுறவுத்துறை வலுவிழந்துவிட்டது, எனவே வங்கிகள் ஊடாக வழங்கப்படும் வாழ்வாதாரக் கடன்களை, கூட்டுறவு வங்கிகள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற கோரிக்கை நிதி அமைச்சரிடம் நேரில் முன்வைக்கப்பட்டது.
கடற்தொழில் கூட்டுறவு அமைப்புக்கள் கடலில் பல நாள்கள் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடத்தக்க கப்பல்கள் தமக்குத் தேவை என்று கோரிக்கை முன்வைத்தன. அதற்கு நிதி அமைச்சர், தமது அமைச்சின் ஊடாக மீன்பிடி அமைச்சுக்கு விண்ணப்பங்களை அனுப்புமாறும், பலநாள் கப்பல்களை 50 வீத மானியத்துடன் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் பதிலளித்துள்ளார்.
வடக்கில் ஒரு நாளைக்கு 6 ஆயிரம் லீற்றல் பால் உற்பத்தி செய்யப்படுவதாகவும், மேலும் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றும், பாலைச் சேமிப்பதற்கும், பால் உற்பத்திப் பொருள்களைச் செய்வதற்குமான உதவிகள் தேவை என்றும் பால் உற்பத்தி கூட்டுறவு அமைப்புக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன. அதற்கு நடவடிக்கை எடுப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
Post a Comment