Ads (728x90)

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி எளிதான பிரிவில் இடம் பிடித்துள்ளது.

உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் அணிகள் இடம் பெற்றுள்ள பிரிவுகளை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதில் போட்டியை நடத்தும் நாடான இந்தியா ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. உலக தரவரிசையில் 6-வது இடமும், 1975-ம் ஆண்டு சாம்பியன் பட்டமும் வென்ற இந்திய அணி இடம் பெற்றுள்ள அதே பிரிவில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பெல்ஜியம் மற்றும் கனடா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் உள்ளன.

இந்த அணிகளில் தரவரிசையில் 3-வது இடத்தில் பெல்ஜியம் மட்டும் வலுவான போட்டியாளராக இருக்கக்கூடும். தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள கனடா, 15-வது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளை இந்தியா எளிதாக எதிர்கொள்ளும் என கருதப்படுகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நவம்பர் 28-ம் தேதி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 2-ம் தேதி பெல்ஜியத்துடனும், 8-ம் தேதி கனடாவுடனும் மோதுகிறது.

இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று, உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் அர்ஜென்டினா ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் நியூஸிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய அணிகளும் உள்ளன. ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியனும் உலக தரவரிசையில் முதலிடம் வகிக்கும் ஆஸ்திரேலியா அணியுடன் இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘டி’ பிரிவில் 4 முறை சாம்பியனான பாகிஸ்தான், 3 முறை சாம்பியனான நெதர்லாந்து, இரு முறை சாம்பியனான ஜெர்மனி ஆகிய அணிகளுடன் மலேசியா இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகள் இடையே கடும் போட்டி நிலவக்கூடும்.

லீக் ஆட்டங்களில் நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு இரு ஆட்டங்கள் நடைபெறும். முதல் ஆட்டம் மாலை 5 மணிக்கும், 2-வது ஆட்டம் இரவு 7 மணிக்கும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க நாளான 28-ம் தேதி நடைபெறும் 2-வது ஆட்டத்தில் பெல்ஜியம் - கனடா அணிகள் மோதுகின்றன. லீக் ஆட்டங்களின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெறும்.

ஒவ்வொரு பிரிவிலும் 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றில் நேருக்கு நேர் மோதும். இதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதி சுற்றில் கால்பதிக்கும். இந்த பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் டிசம்பர் 10 மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெறுகிறது. கால் இறுதி ஆட்டங்கள் டிசம்பர் 12 மற்றும் 13 தேதிகளிலும், அரை இறுதி ஆட்டங்கள் 15-ம் தேதியும் நடைபெறுகின்றன. 16-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget