உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பிற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி.யின் ஆதரவைப் பெற்றுக் கொண்டமை சுயநலத்திற்காக கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டுவிட்டது என்பதையே எடுத்துக் காட்டுகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.கந்தர்மடம், அரசடி வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகம் நேற்று முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வின்போது ஊடகவியலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களில் ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து வருகின்றமை தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்குப் பதிலளிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் பதிலளிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஈ.பி.டி.பி.யுடன் தாங்கள் பேரம் பேசவில்லை என்றும், ஈ.பி.டி.பி. தமக்கு நேரடியாக ஆதரவு தரவில்லை என்றும் ஊடகங்களுக்கு கூறியுள்ளார். ஆனால் என்னதான் இருந்தாலும் ஒருமித்து நியமனங்கள் நடைபெறவில்லை என்று தெரிகின்றது.
பதவி வகிக்கின்றவர்கள் ஆட்சியை சரியான முறையில் கொண்டு நடத்த வேண் டும். சாவகச்சேரி நகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு, ஈ.பி.டி.பி. ஆதரவு வழங்கியது என்பது தொடர்பில் சரியாக நான் அறியவில்லை.
என்னவாக இருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி.யின் ஆதரவுடன் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை அமைத்தால், கூட்டமைப்பு கொள்கைகளை கைவிட்டு சுயநலன்கள் தான் எமக்கு முக் கியம் என்ற கருத்து ஏற்படும் என்பது தான் என்னுடைய அவதானிப்பாக உள்ளது.
யாழ்.மாநகர சபையின் ஊழலை விசாரணை செய்ய வேண்டும். அத்துடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் கடந்த காலங்களில் யாழ்.மாநகர சபையை ஆட்சி செய்தபோது மேற்கொண்ட ஊழல் தொடர்பில் தற்போது ஆட்சிப்பீடம் ஏறியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அதில் உள்ள உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.
இது தொடர்பில் வடக்கு மாகாண சபையும் தனது பங்கிற்கு விசாரணைகளை மேற்கொள்ளும். இவ்விடயத்தை விசாரணை செய்ய ஏற்கனவே வடக்கு மாகாண சபையினால் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
அக் குழு நடத்திய விசாரணைகளில் ஈ.பி.டி.பி.யினரின் ஆட்சியில் யாழ்.மாநகர சபை நிர்வாகத்தில் ஊழல்கள் நடைபெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
எனவே தற்போது ஆட்சியில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஈ.பி.டி.பி. கடந்த காலத்தில் செய்த ஊழல் தொடர் பில் முறையான விசாரணை செய்ய வேண் டும். அவர்கள் செய்வார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.
Post a Comment