ரஷ்ய உளவாளி மீதான தாக்குதல் குறித்து கூட்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற ரஷ்யா வின் கோரிக்கையை ரசாயன ஆயுத தடுப்பு அமைப்பு (ஓபிசிடபிள்யூ) நிராகரித்துள்ளது.ரஷ்ய உளவுப் பிரிவில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர் செர்ஜி ஸ்கிரிபால். பின்னர் இவர் ரஷ்ய ராணுவ ரகசியங்களை பிரிட்டன் உளவு அமைப்பான எம்16-க்கு அளித்ததாக ரஷ்யாவில் கைது செய்யப்பட்டார். பின்னர் உளவாளிகளை பரஸ்பரம் ஒப்படைத்தல் ஒப்பந்தத்தின்படி ஸ்கிரிபால் பிரிட்டனிடம் ஒப்படைக்கப் பட்டார்.
பிரிட்டனில் தங்கியுள்ள ஸ்கிரிபால் மற்றும் அவருடைய மகள் யூலியா ஆகியோர் மீது கடந்த மார்ச் 4-ம் தேதி விஷ வாயு தாக்குதல் நடத்தப்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தத் தாக்குதலை ரஷ்யா நடத்தியதாக பிரிட்டன் குற்றம் சாட்டி உள்ளது. அதை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
இந்த சம்பவத்தால் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டில் பணியாற்றிய ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக ரஷ்யாவும் பிரிட்டன், அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது. இந்த விவகாரத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்காக, நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள ரசாயன ஆயுத தடுப்பு அமைப்பின் (ஓபிசிடபிள்யூ) கூட்டத்தை ரஷ்யா நேற்று முன்தினம் கூட்டியது. இந்தக் கூட்டத்தில் ஸ்கிரிபால் மீதான தாக்குதல் குறித்து, ரஷ்யா-பிரிட்டன் கூட்டு விசாரணை நடத்துவது குறித்து ஒரு தீர்மானத்தை ரஷ்யா முன்மொழிந்தது.
இதன்படி, ரஷ்யா, பிரிட்டன் தலைமையில் விசாரணை நடைபெறும் என்றும் இதற்கு ஓபிசிடபிள்யூ இயக்குநர் நடுவராக இருப்பார் என்றும் அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்தத் தீர்மானத்துக்கு 3-ல் 2 பங்கு ஆதரவு கிடைக்காததால் தோல்வி அடைந்தது. அதாவது தீர்மானத்துக்கு ஆதரவாக 6 நாடுகளும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன. 17 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.
ஆதரவு இல்லாததால் தீர்மானம் தோல்வி அடைந்தது. அதனால், இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை ரஷ்யா கூட்டி உள்ளது
Post a Comment