Ads (728x90)

வரலாற்றில் முதன் முறையாக அதிகூடிய நேரடி வெளிநாட்டு முதலீடுகள் கடந்த வருடத்தில் பதிவாகியுள்ளதாக அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் 1.9 பில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கப் பெற்றன. இந்த நிலைமை நாட்டின் பொருளாதார ஸ்திரத் தன்மைக்கு பாரிய உந்துசக்தியாக அமைந்திருந்தது. இந்த வருடத்தில் இந்த முதலீடுகளை 2.9 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

அடுத்த மாதத்திற்குள் ஒரு பில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சமரவிக்ரம நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மூலோபாய அபிவிருத்தி செயற்திட்ட சட்டமூலத்தின் கீழ் முன்வைக்கப்பட்ட இரண்டு நிலையியற் கட்டளைகள் தொடர்பில் இடம்பெற்ற விவாதத்தின் போதே அமைச்சர் மலிக் சமரவிக்ரம இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், பொருளாதார அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஏற்படுத்திக் கொள்ளப்படும் வர்த்தக உடன்படிக்கைகள் மூலம் நாட்டின் ஏற்றுமதித் துறை பன்முகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இதன் மூலம் ஏற்றுமதி துறைசார் உற்பத்திகளை மேலும் விரிவுபடுத்தலாம் என்று அமைச்சர் மலிக் சமரவிக்ரம சுட்டிக்காட்டினார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget