மனித மூளையில் சுரக்கும் டொபமைன் மற்றும் செரோட்டொனின் ஆகியவற்றின் உற்பத்தி குறைவடைதலாலேயே இந்த மன அழுத்தம் பொதுவாக ஏற்படுகின்றது. இருப்பினும் வேலைச்சுமை, நிதி நெருக்கடி, தவறான உறவுகள், திடீர் அதிர்ச்சி, குடும்பத்தில் ஒற்றுமையின்மை போன்ற மனதை பாதிக்கும் காரணிகளாலும் இந்த மன அழுத்தம் ஏற்படுகின்றது.
இனம் புரியாத சோர்வு, சோகம், கவலை, நம்பிக்கையின்மை, அக்கறையின்மை, பீதி, மனக் கிளர்ச்சி, தற்கொலை முயற்சி போன்ற உணர்வு ஒருவரிடத்தில் காணப்படுமாயின் அவர் கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என கொள்ளலாம்.
இந்த மன அழுத்தத்திற்கு மாத்திரைகள் மூலம் தீர்வு உண்டு. எனினும் அதனால் சில பக்க விளைவுகள் ஏற்படுவதும் தவிர்க்க முடியாதது. எனவே இதற்கு மாறாக பின்வரும் இயற்கை வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.
01. மனதுக்கு பிடித்தவர்களுடன் நேரம் செலவழித்தல்
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனக்கு பிடித்தவர்களுடன் நேரம் செலவழிப்பதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம். ஒருவர் சந்தோஷமாக சிரித்து கவலைகளை புறந்தள்ளுவதன் மூலம் மூளையில் உள்ள செரோட்டொனின் அதிகரிப்பதாகவும் மன அழுத்தம் குறைவடைவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
02. செல்லப்பிராணி ஒன்றை வளர்த்தல்
மன அழுத்தம் கூடிய ஒருவர் செல்லப்பிராணியுடன் நேரம் செலவழிக்கும் போது மூளையில் உள்ள செரோட்டொனின் அளவு அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
03. மசாஜ் செய்தல்
மசாஜ் செய்வதன் மூலம் ஒருவரது உடல் மட்டுமின்றி மூளையும் இளைப்பாறுவதோடு மூளையில் உள்ள குரோட்டிசொல் ஹோர்மோன் குறைவடைந்து செரோட்டொனின் அளவு அதிகரிக்கின்றமை தெரியவந்துள்ளது. இதன் மூலம் மன அழுத்தம் குறைவடைகின்றமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
04. கோப்பி மற்றும் தேநீர் அருந்துதல்
நாளொன்றுக்கு கோப்பி மற்றும் தேநீர் அருந்துவதன் மூலம் செரோட்டொனின் அளவு அதிகரிப்பதாகவும் அது மன அழுத்தத்தை குறைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
05. ஊட்டச்சத்துள்ள உணவு உட்கொள்ளல்
தானிய வகைகள், வாழைப்பழம், கிவி, பெர்ரி, பசளி, தக்காளி மற்றும் மீன் ஆகியவற்றை உட்கொள்வதால் மூளையில் உள்ள செரோட்டொனின் அளவு அதிகரிக்கின்றது.
06. உடற்பயிற்சி
தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கின்றது. இதன் மூலம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் அதிலிருந்து விடுபட ஏதுவாக அமைகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Post a Comment