Ads (728x90)

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஞாயிற்றுக்கிழமை புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிதசேனாரட்ண தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்றைய தினம் இரவு தொலைபேசியில் இடம் பெற்ற உரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு புதிய பிரதமர் பதவிப் பிரமாணம் இடம் பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் எனினும் அமைச்சரவை நியமனம் தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

இதற்கமைய டிசெம்பர் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஐந்தாவது தடவையாகவும் சிறிலங்காவின் பிரதமராக ரணில் பதவியேற்பார் என்றும் அதனை அடுத்து அமைச்சரவை பதவியேற்கும் என்றும் ராஜித்த கூறினார்.

சிறிலங்கா ஜனாதிபதி முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்றதை அடுத்து புதிய அமைச்சரவை பதவியேற்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தரின் தகவல்களுக்கு அமைய ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவை 30 பேரைக் கொண்டதாக இருக்கும் என்றும், இந்த அமைச்சரவையும் டிசெம்பர் 17 ஆம் திகதியான திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுக் கொள்ளவுள்ளது.

இதேவேளை ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவாக இணைந்து கொள்ளவும் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர். அதனால் இவர்களையும் இணைத்துக் கொண்டு அவர்களில் ஆறு பேருக்கு அமைச்சரவையிலும் இடம் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இது தொடர்பான பேச்சுக்கள் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் இன்று மாலை முதல் அலரி மாளிகையில் இடம் பெற்றுள்ளதாகவும் மேலும் தெரியவருகின்றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget