Ads (728x90)

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ”பேத்தாய்” புயல் திருகோணமலைக்கு தென்கிழக்கில் 700 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தெற்கு, தென்கிழக்கில் 960 கி.மீ. தொலைவிலும், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்துக்கு தெற்கு, தென்கிழக்கில் 1130 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து இலங்கையின் வடமேல் மாகாணத்தை அண்மித்ததாக வடக்கு நோக்கி இது நகர்வதுடன் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்து செல்கிறது.

தொடர்ந்து இதே திசையில் நகர்ந்து நாளை 16 ஆம் திகதி காலை அதிதீவிர புயலாக வலுப்பெற்று சென்னையை நெருங்கவுள்ளது. ”பேத்தாய்” புயல் கரையை நெருங்க நெருங்க காற்றின் வேகம் ”கஜா” புயல் போல் 120 கி.மீ. வரை இருக்கக்கூடுமென்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் மணிக்கு 65 முதல் 75 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சம் 85 கி.மீ. வேகத்திலும் காற்று வீசிக்கொண்டிருக்கிறது.

இன்று 15ஆம் திகதி தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் 90 முதல் 100 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சம் 110 கி.மீ. வேகத்திலும் காற்று வீசுகின்றது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை 16 ஆம் திகதி காற்றின் வேகம் 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சம் 120 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசும், கடல் அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழும்பி கொந்தளிப்பு ஏற்படும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு அண்மித்ததாக உள்ள இந்த சூறாவளியின் நகர்வால் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்வதுடன் கடற்பிரதேசம் சற்று கொந்தளிப்பாகவும் காணப்படும்.



Post a Comment

Recent News

Recent Posts Widget