நேற்று முன்தினம் முதல் பெய்துவரும் அடை மழையினால் இலங்கையின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களை சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் சிறியளவில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
வட மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் 2,788 குடும்பங்களை சேர்ந்த 9,161 பேர் பாதிக்கப்படுள்ளனர். மேலும் 1,829 குடும்பங்களை சேர்ந்த 5,775 பேர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாக இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அனைத்து குளங்களும் வான்பாய்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் தாழ்நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கிளிநொச்சியின் பிரதான குளமான இரணைமடுவின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டமையால் தர்மபுரம், பரந்தன், கண்டாவளை, முரசுமோட்டை, வட்டக்கச்சி, நாகேந்திரபுரம் உள்ளிட்ட பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வெள்ளத்தில் மூழ்கியுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களிற்கு நகர்த்தும் மீட்பு பணியில் பொலிசார், கடற்படையினர், இராணுவத்தினர், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)


Post a Comment