Ads (728x90)

பரமக்குடி தாலுகா நயினார்கோவில் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் நெல் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக்கு முன்பாகவே ஓரளவுக்கு மழை பெய்ய தொடங்கியதால் அதனை நம்பி அதிகப்படியான விவசாயிகள் நம்பிக்கையுடன் நெல் விவசாயத்தை தொடங்கினர். 

மேலும் வழக்கத்தை விட இரண்டு முறை வைகை தண்ணீர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திறந்து விடப்பட்டதால் எப்படியும் விவசாயம் செழித்து விடும் என்ற நம்பிக்கையில் முழு மூச்சாக நெல் விவசாயத்தில் இறங்கினர். தொடக்கத்தில் நெற்பயிர்கள் அனைத்தும் நன்றாக இருந்தன. ஆனால் அதனை தொடர்ந்து பருவமழை வழக்கம் போல பொய்த்துப்போனதால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது.

மேலும் வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும் நயினார்கோவில் பகுதியில் உள்ள எந்த கண்மாய்க்கும் வந்து சேரவில்லை. இதனால் பரிதவித்த விவசாயிகள் கஜா புயலின் போது மழை பெய்யும் என்று பெரிதும் நம்பினார்கள். அதுவும் இவர்களுக்கு கைகொடுக்கவில்லை.

இதனால் நெற்பயிர்களை காப்பாற்ற வேறு வழியில்லாமல் டேங்கரில் கொண்டு வரப்படும் தண்ணீரை விலைக்கு வாங்கி விவசாயத்திற்கு பயன்படுத்துகின்றனர். ஒரு ஏக்கருக்கு 12 டேங்கர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு டேங்கர் தண்ணீர் தலா ரூ.1000 வீதம் ஒரு ஏக்கருக்கு தண்ணீர் பாய்ச்ச ரூ.12 ஆயிரம் செலவாகிறது.

இதனால் விவசாயிகளின் கடன் சுமை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுக்கான பயிர் இழப்பீட்டு தொகை கிடைத்தால் தற்போது இந்த நிலைமையை ஓரளவுக்கு சமாளிக்க முடியும் என்று விவசாயிகள் கருதுகின்றனர். எனவே பயிர் இழப்பீட்டு தொகையை விரைவில் வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget