சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது.கடந்த 15 ஆம் திகதி நியூசிலாந்தின் பேசின் ரிசேர்வ் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை இலங்கை அணிக்கு வழங்கியது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றது.
கருணாரத்ன 79 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததுடன் மெத்திவ்ஸ் 83 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பந்து வீச்சில் டிம் சவ்தி 6 விக்கெட்டுகளையும் வேக்னர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி டொம் லதமின் இரட்டைச்சத்த்தின் உதவியுடன் 578 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய லதம் இறுதி வரை ஆட்டமிழக்காது 264 ஓட்டங்களைப் பெற்றார்.
இவர் தவிர அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 91 ஓட்டங்களையும் ரோஸ் டெய்லர் மற்றும் ஹென்றி நிகொல்ஸ் தலா 50 ஓட்டங்களைப் பெற்றனர். பந்து வீச்சில் லஹிரு குமார 4 விக்கெட்டுகளையும் தில்ருவன் பெரேரா மற்றும் தனஞ்சய டி சில்வா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்படி நியூசிலாந்து அணி 297 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் 3 ஆம் நாள் தேநீர் இடைவேளையின் பின்னர் தமது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணி 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவின் போது இலங்கை அணி 3 விக்கட்டுக்கள் இழப்பிற்கு 20 ஓட்டங்களைப் பெற்றது.
நியூசிலாந்து அணியின் பக்கம் வெற்றி இருந்த நிலையில் 4 ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி மிக நிதானமாக ஆடத்தொடங்கியது. சிறப்பாக ஆடிய குசல் மெண்டிஸ் மற்றும் அஞ்சலோ மெத்திவ்ஸ் ஜோடி மிக நேர்த்தியாக ஆடியது. 4 ஆம் நாள் முழுவதும் விக்கெட் இழப்பின்றி ஆடியதன் மூலம் 10 வருடங்களின் பின் இச்சாதனைக்கு சொந்தக்கார்ர்களாக மெத்திவ்ஸ் , மெண்டிஸ் ஜோடி பெயர் பதித்தது. 5 ஆம் நாள் ஆரம்பித்து மேலும் 12 ஓவர்கள் வீசப்பட்டிருந்த நிலையில் போட்டி மழையினால் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை விடாத காரணத்தால் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு கொண்டு வருவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இதன்போது குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காது 141 ஓட்டங்களுடனும் அஞ்சலோ மெத்திவ்ஸ் ஆட்டமிழக்காது 120 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைப்பாட்டமாக 274 ஓட்டங்களைப் பெற்றிருந்ததுடன் இந்த வருடத்தில் டெஸ்ட் போட்டியொன்றில் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய இணைப்பாட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக இரட்டைச்சதம் பெற்ற டொம் லதம் தெரிவு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதி கிரிஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment