Ads (728x90)

எதிர்வரும் பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் யாழ். புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகள் இடம்பெற வேண்டும் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அரச நிதியை வீணாக்கும் வகையில் புதிய பேருந்து நிலையம் பயன்படுத்தப்படாமல் இருப்பதை அனுமதிக்க முடியாது. தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகிய இருதரப்பினரும் இணக்கப்பாட்டுடன் சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற வீதி போக்குவரத்து நெருக்கடியை குறைப்பது தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்ட, வட மாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பிரதிநிதிகளிடம் இவ்விடயம் தொடர்பில் கேட்டறிந்த நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சிவராசா சிவபரன் முதற்கட்டமாக தமது சேவைகளை பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க இணக்கம் தெரிவித்ததோடு, தம்மைத்தொடர்ந்து இலங்கை போக்குவரத்து சபையினரும் அங்கு சேவையில் ஈடுபடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை இவ்விடயம் தொடர்பில் தொழிற்சங்கத்தினருடன் கலந்துரையாடலொன்றை நடாத்திய பின்னர் தமது சாதகமான நிலைப்பாட்டை தெரிவிப்பதாக இ.போ.சபை வட மாகாண பிராந்திய முகாமையாளர் செல்லத்துரை குணபாலசெல்வம் தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் யாழ்.பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன், யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி. கருணாசிங்கம், பொலிஸ் போக்குவரத்து பிரிவினர், இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளர்கள் மற்றும் தனியார் போக்குவரத்து சங்கத்தினர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget