Ads (728x90)

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபரில் நடைபெறவுள்ள ரி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் ஒக்டோபர் 16 ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம் திகதி வரை ரி20 உலகக் கோப்பைப் போட்டிகள் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன், சிட்னி, பிரிஸ்பேன், அடிலெய்ட், ஜிலாங், ஹோபர்ட், பெர்த் ஆகிய 07 நகரங்களில் நடைபெறவுள்ளன.

இந்த 07 நகரங்களிலும் மொத்தம் 45 ஆட்டங்கள் நடைபெறவுள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பையில் ஏற்கெனவே 12 அணிகளின் பங்கேற்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

முதல் சுற்றுப் போட்டிகள் ஜிலாங்கில் உள்ள கர்தினா பார்க்கில் இலங்கை-நமிபியா அணிகளிற்கிடையிலான ஆட்டத்துடன் ஒக்டோபர் 16 ஆம் திகதி தொடங்குகின்றன. 

குருப் ஏ பிரிவில் இரு அணிகள் தகுதிச்சுற்று மூலம் தேர்வு பெறும். அதேபோல இரு முறை சாம்பியனான மே.இ.தீவுகள் அணியும் தகுதிச்சுற்று மூலம் சூப்பர்-12 சுற்றுக்கு வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குருப்-பி பிரிவில் இடம் பெற்றுள்ள மேற்கு இந்தியத்தீவுகள் அணி ஸ்கொட்லாந்து, மற்றும் இரு தகுதிச்சுற்று அணிகளுடன் மோதுகின்றது.

சூப்பர்-12 சுற்றுகளில் குரூப்-1, மற்றும் குரூப்-2 என இரு பிரிவுகளில் அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குரூப்-1-ல் இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், தகுதி சுற்றில் ஏ-குரூப்பில் முதலிடம் பெறும் அணி, பி குரூப்பில் 2வது இடம் பெறும் அணி தகுதி பெறும்.

குரூப்-2ல் இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், பி பிரிவில் முதலிடம் பெறும் அணி, ஏ பிரிவில் 2வது இடம் பெறும் அணி தகுதிபெறும்.

போட்டி நடத்தும் மற்றும் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை சிட்னியில் நடக்கும் போட்டியில் சந்திக்கிறது. நியூஸிலாந்து அணி நவம்பர் 01ஆம் திகதி பிரிஸ்பேனில் நடக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கடந்த உலகக் கோப்பையைப் போன்று ஒரே குரூப்பில் உள்ளன. ஒக்டோபர் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எம்சிஜி மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இரு அரையிறுதி ஆட்டங்கள் சிட்னியிலும், அடிலெய்டிலும் நடக்கின்றன, இறுதிப் போட்டி மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சூப்பர்-12 பிரிவில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் நேரடியாகச் சென்றுவிடும். 

ரி20 தரவரிசையில் 08 வது இடத்துக்கு கீழே இருந்த இலங்கை, மே.இ.தீவுகள், ஸ்கொட்லாந்து, நமிபியா ஆகிய அணிகள் முதல் சுற்றுக்குத் தகுதி பெறும் மீதமுள்ள 4 அணிகள் நடந்துவரும் தகுதிச்சுற்று மூலம் முதல் சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget