கொரோனாவின் முன்னைய திரிபுகளை காட்டிலும் குறைந்த அளவிலேயே ஒமிக்ரோன் திரிபால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீவிரமான உடல் நலக்குறைவு ஏற்படுகிறது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் ஒமிக்ரோன் திரிபு வேகமாக பரவுவதால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சுகாதார அமைப்புகள் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த திங்கட்கிழமை மட்டும் 24 மணி நேரத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டில் வியாழக்கிழமை ஒரே நாளில் 2,61,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை பிரிட்டனில் 1,79,756 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 231 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் 71% அதிகரித்திருப்பதாகவும், அமெரிக்காவில் 100% அதிகரித்திருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
உலகம் முழுக்க கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களில் 90% பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. முந்தைய திரிபுகளைப் போல ஒமிக்ரோன் திரிபும் மக்களை மருத்துவமனையில் சிகிச்சை பெற வைப்பதோடு, அது மக்களை கொல்கிறது.
ஒமிக்ரோன் திரிபு அதிக தொற்றுத்தன்மை கொண்டது மற்றும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்குக் கூட தொற்றை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது என தெரிவித்துள்ளார்.
Post a Comment