கொவிட் தொற்றுப் பரவல் காலத்தில் சீனாவிடமிருந்து கிடைத்த பொருள்கள், தடுப்பூசி மற்றும் நிதி உதவிகளுக்காக சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ அவர்களுக்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இலங்கை அரசாங்கத்தினதும், மக்களினதும் சார்பில் நன்றியைத் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை நினைவு கூர்ந்த வாங் யீ மீண்டும் இலங்கைக்கு வருகைதரக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்ததுடன், நெருக்கமான நண்பன் என்ற வகையில் சீனாவின் ஒத்துழைப்பு எப்போதும் இலங்கைக்கு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கை திறக்கப்பட்டுள்ளது. சீன சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதற்கு உதவுமாறும் வாங் யீயிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
கொவிட் தொற்று நோய்க்கு முகங்கொடுத்துள்ள சூழ்நிலையில் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக கடனை மீளச் செலுத்துவதை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்துமாறும், அது நாட்டுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என்றும் ஜனாதிபதி கேட்டுள்ளார்.
அதேபோன்று சீனாவிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகளின் போது சலுகை வர்த்தகக் கடன் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தால், கைத்தொழிற்றுறையைத் தடையின்றி சீராக நடத்த முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சீனாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த வாங் யீ, எதிர்வரும் காலங்களில் அது நிறைவேறும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
Post a Comment